பாரிசின் 19 ஆவது வட்டத்தில் புதியதாக நர்சரி பள்ளி கட்டுவதற்காக மரங்கள் வெட்டப்படுவதற்கு பாரிஸ் நகரவாசிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பிரான்சில் கோடைகாலத்தில் வெப்பநிலை அதிகளவு உயர்ந்துள்ளது. இந்த வாரம் மட்டும் பாரிஸில் 35 டிகிரி செல்சியஸ்க்கு மேலான வெப்பம் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் பாரிசின் 19 ஆவது வட்டத்தில் மழலையர்களுக்கான பள்ளி கட்டுவதற்காக மரங்கள் வெட்டப்படுவது பாரிஸ் நகரவாசிகளின் எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளது.
‘எங்களுக்கு கிரஷ் எனப்படும் மழலையர் பள்ளி வேண்டும் ஆனால் மரங்கள் இல்லாமல் அல்ல’ என்கின்ற விண்ணப்பம்உள்ளூர்வாசிகளால் உருவாக்கப்பட்டு, இதுவரை கிட்டத்தட்ட 1900 கையெழுத்துக்கள் பெறப்பட்டுள்ளன.
1960 ஆம் ஆண்டு கட்டப்பட்ட அந்த நர்சரி பள்ளி, கடந்த 40 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ள நிலையில் தற்போது அங்கிருக்கும் 12 மரங்கள் வெட்டப்பட்டு புதிதாக பள்ளி கட்டாத திட்டமிடப்பட்டுள்ளது.
‘இப்போது இருக்கும் நர்சரியை இடித்து விட்டு அதே இடத்தில் புதிதாக நர்சரி பள்ளியை கட்டத் துவங்கினால், அதை முடிக்க மாத கணக்கிலோ அல்லது ஆண்டு கணக்கிலோ கூட ஆகக் கூடும். இது இப்போது மக்களை மிகுந்த கடிதத்திற்கு ஆளாக்கும்’ என்று பாரிசின் 19 ஆவது வட்ட நகர மன்ற தலைவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் கிட்டத்தட்ட 200 மக்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில், இந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நகர மன்ற தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இச்சிக்கலுக்கு நல்லதொரு தீர்வை காண முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார்.