Thursday, January 15, 2026

கிரிப்டோ தொழிலதிபரின் குடும்பத்தை கடத்த முயன்ற கும்பல் : பாரிசில் பரபரப்பு! 

by Editorial Team
0 comments

பாரிசில் பட்டப்பகலில் பிரபல தொழிலதிபரின் மகள் மற்றும் பேரனை கடத்த முயன்ற மர்ம கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது.

‘பேமியம்’ (Paymium) எனும் பிரெஞ்சு கிரிப்டோ (Cryptocurrency) நிறுவனத்தின் தலைவராக (CEO) இருப்பவர் பியர் நொசாட் (Pierre Noizat). இவருடைய மகள் மற்றும் பேரனை பாரிசின் 11-வது மாவட்டத்தில் வைத்து கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பட்டப்பகலில் துப்பாக்கி வைத்திருந்த 4 பேர் கொண்ட கும்பல், இருவரையும் கடத்த முயன்ற நிலையில் அவர்களிடமிருந்து நூலிழையில் இருவரும் தப்பியுள்ளனர்.

நின்றுக்கொண்டிருந்த வேனில் இருந்து குதித்த முகமூடி அணிந்த 3 பேர், வீதியில் வந்துக்கொண்டிருந்த தொழிலதிபரின் மகளையும் உடனிருந்த அவருடைய மகனையும் திடீரென வேனுக்குள் தள்ளி கடத்த முயன்றனர். இதைக் கண்டு அவர்களை தடுக்க முயன்ற அவருடைய கணவரையும் சரமாரியாகத் தாக்கினர். 

வேனில் ஏற மறுத்து அவர்களுடன் கடுமையாக போராடிய அந்த பெண், கடத்தல்காரர்களின் கைத்துப்பாக்கியை பிடுங்கி தூக்கியெறிந்ததோடு தங்களை காப்பாற்றுமாறு கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் கூடியதும் சுதாரித்துக்கொண்ட அந்த மர்ம கும்பல், அருகில் தயாராக இருந்த வேனில் ஏறி தப்பியோடிவிட்டதாக காவல்துறையினர் கூறினர்.

அந்த கும்பல் கடத்த முயன்ற பெண், பிரெஞ்சு கிரிப்டோகரன்சி பரிமாற்ற தளமான ‘பேமியம்’ (Paymium) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனரின் மகள் ஆவார்.

இதே போன்று கடந்த ஜனவரி மாதம் பிரஞ்சு கிரிப்டோ தொழிலதிபர், டேவிட் பாலண்ட் (David Balland) மற்றும் அவரது மனைவி ஆகியோர் கடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிரான்சில் இது போன்ற கடத்தல் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பிரெஞ்சு அரசாங்கம் இது போன்ற திட்டமிட்ட குற்ற செயல்களை கட்டுப்படுத்த திணறி வருகிறது. 

கடந்த ஆண்டு மே மாதம், ‘தி ஃபிளை’ (The fly) என்று அழைக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் மன்னன், முஹம்மத் அம்ரா சிறைத்தண்டனை பெற்று காவல்துறை அதிகாரிகளுடன் வேனில் சென்றுகொண்டிருந்தபோது முகமூடி அணிந்து துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர்கள் உடனிருந்த சிறை காவலர்களை கொன்று அம்ராவை விடுவித்து தப்பிச்சென்றனர். பிப்ரவரி மாதம் மீண்டும் அவர் கைது செய்யப்பட்டு ரோமானியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். நீண்ட நாட்களாகவே குற்ற சம்பவங்களில் கிரிப்டோவின் பங்கு அதிகரித்து வருவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். உலக அளவில் பணமோசடி, தீவிரவாதிகளுக்கு நிதியுதவி போன்றவற்றை கண்காணிக்கும் ‘பைனான்சியல் ஆக்ஷன் டாஸ்க் போர்ஸ்’ (The Financial Action Task Force – FATF) என்ற அமைப்பு குற்றவாளிகளுக்கும் தீவிரவாத அமைப்பினர்களுக்கும் பண பரிமாற்றங்கள் செய்யும் மிகவும் பாதுகாப்பான இடமாக கிரிப்டோ கரன்சி மாறிவருவதை சுட்டிக்காட்டியுள்ளது.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech