Sunday, April 26, 2026

பிரான்சில் 9 கோடி பிக்காசோ ஓவியத்தை 100 யூரோக்கு வாங்கிய நபர்!

by Editorial Team
0 comments
பிரான்சில் 9 கோடி பிக்காசோ ஓவியத்தை 100 யூரோக்கு வாங்கிய நபர்!

அல்சைமர் நோய் ஆராய்ச்சிக்கான நிதி திரட்ட நடத்தப்பட்ட ஏலத்தில் பிரான்சில் சேர்ந்த ஒருவருக்கு உலகப்புகழ் பெற்ற ஓவியர் பாப்லோ பிக்காசோவின் அரிய படைப்பு குறைந்த விலையில் பரிசாகக் கிடைத்துள்ளது. 

100 யூரோக்கள் மதிப்பிலான லாட்டரி டிக்கெட் மூலம், சுமார் 10 லட்சம் டாலர் மதிப்புள்ள இந்த ஓவியம், சாமானியர் ஒருவருக்குச் சொந்தமாகியுள்ளது உலகளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.

“100 யூரோக்களுக்கு ஒரு பிக்காசோ” (1 Picasso for 100 Euros) என்ற பெயரில் நடத்தப்பட்ட தொண்டு நிறுவன ஏல குலுக்கலில், பாரிசைச் சேர்ந்த மென்பொருள் விற்பனையாளரும் கலை ஆர்வலருமான அரி ஹோதாரா (Ari Hodara) இந்த அதிர்ஷ்டத்தைப் பெற்றுள்ளார். வெறும் 100 யூரோக்கள் (சுமார் 117 டாலர்கள்) செலுத்தி அவர் வாங்கிய ஏல டிக்கெட், பிக்காசோவின் 1941-ம் ஆண்டுப் படைப்பான “டெட் டி ஃபெம்” (Tête de Femme – பெண்ணின் தலை) என்ற கூவாஷ் (Gouache) ஓவியத்தை அவருக்குச் சொந்தமாக்கியுள்ளது.

அல்சைமர் ஆராய்ச்சிக்கான நிதி: 

இந்தச் சிறப்பு ஏலத்திற்காக மொத்தம் 1 லட்சத்து 20 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. இதன் மூலம் கிடைத்த முழு வருமானமும், ஐரோப்பா முழுவதும் அல்சைமர் நோய் குறித்த மருத்துவ ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட உள்ளது.

“இது மோசடியா?” – வெற்றியாளரின் இன்ப அதிர்ச்சி:

கடந்த வார இறுதியில் 94715 என்ற வெற்றிச் சீட்டை வாங்கியிருந்த ஹோதாராவுக்கு, இந்தச் செய்தி முதலில் நம்ப முடியாத ஒன்றாகவே இருந்தது. வெற்றி பெற்ற தகவலைத் தெரிவிக்க, குலுக்கல் அமைப்பாளர்களில் ஒருவரான பெரி கோச்சின் அவரைத் தொலைபேசியில் அழைத்தபோது, “இது மோசடி இல்லை என்பதை நான் எப்படி நம்புவது?” என்று ஹோதாரா கேட்டுள்ளார். பின்னர் காணொளி அழைப்பின் மூலம் பார்வையாளர்களைக் காட்டி உண்மை உறுதி செய்யப்பட்டபோது அவர் இன்ப அதிர்ச்சியில் உறைந்தார்.

“அவர்கள் அழைத்தபோது இது ஏதோ இணைய மோசடி (Phishing) என்றுதான் நினைத்தேன். பிக்காசோ ஓவியத்தை வென்றது ஒரு கனவு போல உள்ளது. அது என் வசதிக்கு முற்றிலும் அப்பாற்பட்டது. நான் அவற்றை அருங்காட்சியகங்களில் மட்டுமே பார்த்திருக்கிறேன்” என சிஎன்என் (CNN) ஊடகத்திடம் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார். அந்த ஓவியத்தை வீட்டில் வைப்பதா அல்லது வேறு என்ன செய்வது என அவர் இன்னும் முடிவெடுக்கவில்லை. அதுவரை அந்தப் படைப்பு, ஏல குலுக்கலை நடத்திய ‘கிறிஸ்டிஸ்’ (Christie’s) ஏல நிறுவனத்தின் பாதுகாப்பகத்திலேயே இருக்கும்.

ஓவியத்தின் பின்னணியும் மதிப்பும்:

பிக்காசோவின் பேரனான ஒலிவியர் விட்மேயர் பிக்காசோ இது குறித்துப் பேசுகையில், தனது தாத்தா தனது உலகப் புகழ்பெற்ற படைப்பான ‘குவெர்னிகா’வை (Guernica) உருவாக்கிய அதே ஸ்டுடியோவில்தான் இந்த ஓவியத்தையும் வரைந்தார் எனக் குறிப்பிட்டார். “இந்த ஓவியத்தின் மதிப்பு 1 மில்லியன் டாலருக்கும் மேலானது; எனவே இது உண்மையிலேயே ஒரு பிரம்மாண்டமான பரிசு” என்று அவர் தெரிவித்தார்.

15 அங்குல உயரமும் 10 அங்குல அகலமும் கொண்ட இந்த “பெண்ணின் தலை” ஓவியம், இரண்டாம் உலகப் போர் தீவிரமடைந்திருந்த காலகட்டத்தில், பிரான்சின் பெரும்பகுதி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பில் இருந்தபோது வரையப்பட்டது. சாம்பல் நிறத்தின் பல்வேறு சாயல்களில், பிக்காசோவுக்கே உரித்தான ‘கியூபிசம்’ (Cubism) பாணியில் பெண்ணின் முகம் இதில் சிதைக்கப்பட்ட வடிவத்தில் தீட்டப்பட்டுள்ளது. இது பிக்காசோவின் சுயபரிசோதனையையும், அவரது தீவிரமான உழைப்பையும் பிரதிபலிக்கிறது என இந்த ஓவியத்தை நன்கொடையாக வழங்கிய ஓபரா கேலரி தெரிவித்துள்ளது.

நவீனத் தொண்டு முறை:

இந்தத் தொண்டு குலுக்கல் முறை மூன்றாவது முறையாக இப்போது நடைபெற்றுள்ளது. தனது நண்பர் ஒருவர்தான் இந்த முன்னெடுப்பைக் கொண்டுவந்தார் என்று கூறும் ஒலிவியர், “மக்களுக்கு பிக்காசோவின் அசல் ஓவியத்தைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குவதோடு, மனிதாபிமான செயல்களிலும் அவர்களை ஈடுபட வைப்பது தொண்டு செய்வதன் நவீனப் பரிமாணம்” என்றார்.

இதற்கு முன் 2013-ல் லெபனானில் உள்ள வரலாற்று நகரான டயரைப் பாதுகாக்கவும், 2020-ல் கோவிட் பெருந்தொற்று காலத்தில் சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரத் திட்டங்களுக்காகவும் இந்தக் குலுக்கல் நடத்தப்பட்டது.

கலைப்படைப்புகளை இதுபோன்று மக்கள் நலனுக்காகப் பயன்படுத்துவதை தனது தாத்தா பாப்லோ பிக்காசோவும் நிச்சயமாக ஆதரித்திருப்பார் என ஒலிவியர் நம்புகிறார். “என் தாத்தா பல விஷயங்களில் ஒரு முன்னோடியாக இருந்தார். அவர் எப்போதும் புதிய விஷயங்களை வரவேற்பவர். இன்று அவர் இருந்திருந்தால், செயற்கை நுண்ணறிவிலோ (AI) அல்லது நவீன காணொளித் தொழில்நுட்பங்களிலோ ஆர்வம் காட்டியிருப்பார்,” என்றார்.

வெற்றியாளருக்கே முழு உரிமை:

இந்தப் பரிசை வென்றவர் அதை என்ன செய்ய வேண்டும் என்பது அவருடைய தனிப்பட்ட உரிமை என ஒலிவியர் தெளிவுபடுத்தினார். “அவர்கள் அதை வரவேற்பறையில் மாட்டலாம், கண்காட்சிக்கு வைக்கலாம் அல்லது விற்றுவிடலாம். முதல் போட்டியின் வெற்றியாளர் தனது பரிசை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தினார். கலைப்படைப்புகளைக் கொடுக்கும்போது அது எந்தவித நிபந்தனையுமின்றி முழுமையாகக் கொடுக்கப்பட வேண்டும் என்பதே என் தாத்தாவின் கொள்கை,” என்றார்.

பிக்காசோ தனது 40-களின் நடுப்பகுதியில், திருமணமானவராக இருந்தபோது, 17 வயதான மேரி-தெரேஸ் வால்டர் என்பவருடன் காதல் வயப்பட்டிருந்தார். அடுத்தப் பத்தாண்டுகளில் பிக்காசோவின் பல ஓவியங்களில் மேரியின் முகச்சாயல் இடம்பெற்றிருந்தது. அப்போது பிக்காசோ தனது காதலிக்கு எண்ணற்ற கலைப்படைப்புகளைப் பரிசாக வழங்கினார்; அவரும் இறக்கும் வரை அவற்றைப் பத்திரமாக வைத்திருந்தார் என்ற வரலாற்றுத் தகவலையும் ஒலிவியர் விட்மேயர் பிக்காசோ நினைவுகூர்ந்தார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2026. All Rights reserved. Powered by NakshatraTech