இரவு நேர பாலே நடனம், இசை விருந்து, நள்ளிரவிலும் தெரு முனைகளில், பிரஞ்சு முத்தங்களை பரிமாறிக் கொள்ளும் ஜோடிகள் என, துாங்கா நகரமாக விளங்கும் பாரிஸ், அதிகாலையிலேயே அலுவலகங்கள், வர்த்தக வளாகங்களில் கடைபரப்ப விரையும் உள்ளூர்வாசிகள் என, 24 மணி நேர உயிர்த்துடிப்புடன் விளங்குகிறது.அன்பை பரிமாறிக்கொள்ளும் காதல் ஜோடிகளும், புதுமண தம்பதியரும், சரித்திரம் போற்றும் சாமானியரும், குடும்பத்துடன் ஒரு முறையாவது சுற்றுலா சென்று வர உகந்த இடம் பாரிஸ். நினைத்த மாத்திரத்தில் சென்று வர விமான சேவை, ஆன் – லைன் முன்பதிவில் அனைத்தையும் திட்டமிட்டு செல்லும் வசதி, குழுவாக சென்று சுற்றி வர பிரத்யேக வசதி என, இன்றை நவீனம், பாரிஸ் சுற்றுலாவை மேலும் இலகுவாக்கி உள்ளது. பாரிஸ் சுற்றுலாவுக்கு ஏற்ற சீசன் என, எதுவும் இல்லை. மழை பொழியும் மே மாதம் தவிர்த்து, ஆண்டு முழுவதும் சுற்றுலாவுக்கென்றே, அர்ப்பணித்துக் கொண்டுள்ள நகரம் அது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு நகரமே மின்மினி விளக்குகளின் ஆடை தரித்து, ஓங்கி உயர்ந்த ஈபிள் டவரின் கம்பீரத்துக்கு, அழகு சேர்க்கும் ஜோடி போல, அலங்காரம் கொண்டுள்ளது. இவ்விழாக்களை, பாரிஸ் நகருடன் இணைந்து கொண்டாடலாம்.
எடுத்துச் செல்ல வேண்டியவை
பாரிஸ் நகரில் ஆண்டு முழுவதும் குளிர் நீடித்தாலும், டிசம்பர், ஜனவரி மாதங்களில் உறைய வைக்கும் ஜில் பனிக்காலம். தெர்மல் இன்னர்வேர், ஸ்கார்ப், ஸ்கால்ப் கேப், ஜெர்கின், லெதர் கோட், பிளேஸர், ஜீன்ஸ் அல்லது உல்லன் கால்சட்டைகள், குளிரை தாக்குப்பிடிக்க உதவும். ஹோட்டல்கள், வணிக வளாகங்கள், கலை அரங்குகள், காட்சி அரங்குகள் அனைத்துமே ஹீட்டர் வசதி செய்யப்பட்டவை என்பதால், இவற்றின் உள்ளே இருக்கும் போது, குளிர்தாங்கும் உடைகள் அவசியப்படாது. ஆனால், நகரை வெட்ட வெளியில் சுற்றிப்பார்க்க, குளிர்கால ஆடைகள் அவசியம்.
தங்கும் வசதி
பாரிஸ் நகரம் சுற்றுலா மையம் என்பதால், 3 நட்சத்திர அந்தஸ்துள்ள விடுதிகள் முதல், ‘சோபிடெல்’, போன்ற 5 நட்சத்திர அந்தஸ்துள்ள ஓட்டல்களில் தங்கலாம். தாராள பண வசதி உள்ளோர், இங்குள்ள அரண்மனை விடுதிகளிலும் கூட தங்கலாம். சிக்கனமாகவும், நீண்ட நாட்களும் ஊர் சுற்ற விரும்புவோருக்கு, பாரிஸ்வாசிகள் கைகொடுக்கின்றனர். இவர்களின் வீடுகளில் பேயிங் கெஸ்ட்டாக, பணம் செலுத்தி தங்கி, ஊரை பல நாட்கள் வலம்வரலாம். எல்லாவற்றுக்குமே முன்பதிவு அவசியம்.
வெப்ப நிலை
பாரிஸ் நகரம், குளிர் பிரதேசங்களில் ஒன்று. ஆண்டு முழுவதும் குளிர் நீடிக்கும். டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில், பகலில் 5 டிகிரி செல்ஷியஸ் முதல், இரவில் 0 டிகிரி செல்ஷியஸ் வரை குளிர் நிலவும். இந்த மாதங்களில், 2 மணி நேரம் வானில் சூரியனை பார்ப்பதே அரிது. சில நேரங்களில், துாறல் மழையும் பெய்கிறது. அதிகபட்ச வெப்பநிலை காணப்படுவது, ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மூன்று மாதங்கள். இந்த காலத்தில் அங்கு அதிகபட்ச வெப்பநிலை, 25 டிகிரி செல்ஷியசாக பதிவாகிறது. 7 – 8 மணி நேரம் வரை வானில் சூரியனை பார்க்கலம். மே மாதம் மழைக்காலம். இந்த மாதத்தில் சராசரியாக 26 மி.மீ., மழை பதிவாகிறது.
தகவல் : DINAMALAR.COM