கடந்த இரண்டு நாட்களில் மட்டும் இணைய மோசடி பேர்வழிகளிடம் சிக்கி புதுச்சேரியை சேர்ந்த 19 நபர்கள் 29,96,011 ரூபாய் பணத்தை இழந்துள்ளனர்.
மூலகுளத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்ற நபர் இணையவழியில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருகிறோம் என்று சொன்னதை நம்பி 9 லட்சத்து 13 ஆயிரத்து 274 ரூபாய் அவர்கள் கூறிய பல்வேறு வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். பணத்தை செலுத்திய பிறகு அவர்களை தொடர்பு கொள்ள முடியாததால் அது சம்பந்தமாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
அனிதா நகர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த ஒருவர் டோல் DOLE என்ற MLM நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஒரே நாளிலேயே பணம் இரட்டிப்பாக கொடுக்கிறார்கள் என்பதை நம்பி 5,72,26 ரூபாயை முதலீடு செய்துள்ளார். அதன் பின் அவர்களிடமிருந்து எந்த பதிலும் வராததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதே டோல் என்ற நிறுவனத்தின் பெயரை வைத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு 40க்கும் மேற்பட்டோர் இரண்டு கோடி ரூபாய் அளவிற்கு ஏமாற்றப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
‘நாங்கள் கொடுக்கின்ற வேலையை நீங்கள் செய்து முடித்தால் உங்களுக்கு பணம் இரட்டிப்பாக கொடுக்கிறோம்’ என்று இணைய வழி மோசடிக்காரர்கள் சொன்னதை நம்பி புதுச்சேரி சேர்ந்த லோகநாதன் என்பவர் 4,64,000 பணத்தை அனுப்பியுள்ளார்.
நெல்லித்தோப்பைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் ‘நாங்கள் அனுப்புகின்ற வீடியோக்களை பார்த்து நீங்கள் லைக் மட்டும் கொடுத்தால் போதும். முதலில் ஒரு சிறிய பணத்தை அனுப்பி இதேபோன்று நீங்களும் முதலீடு செய்யுங்கள் உங்களுக்கு நிறைய லாபம் கிடைக்கும்’ என்று இணைய மோசடிக்காரர்கள் சொன்னதை நம்பி ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் வரை பல்வேறு வங்கி கணக்குகளுக்கு செலுத்தியுள்ளார்.
பாலாஜி என்பவர் இணைய வழியில் சம்பாதிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்று வாட்சப்பில் வந்த தகவலை எடுத்து இரண்டு லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை முதலீடு செய்துள்ளார்.
ஏனாமை சேர்ந்த தீபக்குமார் என்பவர் இணைய வழியில் முதலீடு செய்வதால் அதிக பணம் கொடுக்கிறோம் என்று சொன்னது நம்பி பல்வேறு வங்கி கணக்குகளில் 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாயை முதலீடு செய்துள்ளார்.
முத்தியால்பேட்டை பிரபாகரன் என்பவர் உங்களுடைய பேன் கார்டு அப்டேட் செய்கிறோம் என்று கூறிய நபரிடம் அவருடைய விவரங்கள் அனைத்தையும் சொன்ன பிறகு அவர் வங்கி கணக்கில் இருந்த 24 ஆயிரத்து 986 ரூபாய் திருடியுள்ளனர்.
இவர்கள் அனைவரும் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.
திருபுவனை அருண் என்பவர் வேறு ஒருவருக்கு அனுப்ப வேண்டிய நாற்பத்தி ஐந்தாயிரம் ரூபாய் பணத்தை வங்கி கணக்கு எண்ணை மாற்றி அனுப்பி விட்டார். அதை மீட்க வேண்டி அவர் கொடுத்த புகாரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
இது பற்றி சைபர் கிரைம் பிரிவு காவல் கண்காணிப்பாளர் திரு பாஸ்கரன் மற்றும் ஆய்வாளர்கள் கார்த்திகேயன் மற்றும் கீர்த்தி ஆகியோர் ‘இணைய வழியில் வருகின்ற எந்த தகவலையும் நம்பி பணத்தை செலுத்த வேண்டாம். சராசரியாக நாள் ஒன்றுக்கு 15க்கும் மேற்பட்ட நபர்கள் இணைய வழி மோசடிக்காரர்களிடம் சிக்கி பணத்தை இழக்கின்றனர். பல்வேறு தளங்கள் மூலமாக குறிப்பாக பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகள் மூலமாக மேலும் பல்வேறு கல்லூரிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்தும் இது சம்பந்தமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம் ஆகவே பொதுமக்கள் இணைய வழியில் வருகின்ற எந்த வேலைவாய்ப்பு, முதலீடு, பணம் இரட்டிப்பாக தருகிறோம், குறைந்த விலையில் பொருட்களை தருகிறோம், பழைய பொருட்கள் மிக குறைந்த விலையில் தருகிறோம், போன்ற எந்த ஒரு இணைய வழி அழைப்பையும் நம்பி பணத்தை செலுத்த வேண்டாம்’ என்று எச்சரிக்கை செய்துள்ளனர்.