டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கை நிதி மோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை விசாரணை தொடங்கியது.
இந்த வழக்கில் ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் 2 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. மேலும், பி.ஆர்.எஸ் கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரசேகரின் மகள் கவிதாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதோடு, நேற்று (21/03/2024) இரவு புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவாலிடம் அவரது இல்லத்தில் சுமார் 2 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் நேரில் ஆஜராக கூறி அமலாக்கத்துறை பல முறை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது. ஆனால், கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.
மேலும், சம்மனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடந்தார். இந்த வழக்கை நேற்று (மார்ச் 21, 2024) விசாரித்த நீதிபதிகள், கெஜ்ரிவால் மீதான சட்ட நடவடிக்கைக்கு தடை விதிக்க மறுத்தனர். இந்த தீர்ப்பு வெளியான சில மணி நேரத்தில் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.
அங்கிருந்து அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்ட கெஜ்ரிவால், விசாரணை முடிந்ததும் இன்று (மார்ச் 22, 2024) மாலைக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அவரை கைது செய்யப்பட்டதை எதிர்த்து நாட்டில் பல்வேறு இடங்களில் அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகியோர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.