சத்ருவீல் (Sartrouville) நகர மன்றத்தின் கணினிகளில் மர்ம நபர்கள் சைபர் தாக்குதலை நடத்தி செயலிழக்க வைத்துள்ளனர்.
கடந்த வாரம் பதினாறாம் தேதி இரவு சத்ருவீல் நகர மன்ற நிர்வாகத்தின் கணினிகள் அடையாளம் தெரியாத ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளன.
நகர மன்ற நிர்வாகத்தின் கணினி சர்வல்களை குறிவைத்து இந்த சைபர் தாக்குதல் நடைபெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
‘மெடுசா’ எனப்படும் வைரசின் மூலம் ஹேக்கர்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
கணினிகளை முடக்கிய மர்ம நபர்கள் நகர மன்றத்திடம் வருகின்ற ஆகஸ்டு 31ஆம் தேதிக்குள் 460,000 யூரோக்களை வழங்க வேண்டும் அல்லது திருடப்பட்ட அனைத்து தகவல்களையும் டார்க் நெட் எனப்படும் இணையத்தில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டியுள்ளனர்.
எனினும், நகர மன்ற நிர்வாகம் பணம் கொடுப்பதற்கும், பேச்சு வார்த்தை நடத்துவதற்கும் இசையவில்லை.
தொழில்நுட்ப குழுக்கள் உடனடியாக செயல்பட்டதால் சைபர் தாக்குதலை கூடுமானவரை தடுத்து நிறுத்திவிட்டதாக நகரமன்றம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
‘கணினி சர்வருக்குள் நுழைந்த ஹேக்கர்கள், பல முக்கிய தரவுகளை அழிக்க முயன்றுள்ளனர்’ என்று நகர மன்ற நிர்வாகம் அளித்துள்ள புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சைபர் தாக்குதலால் முதற்கட்டமாக 200,000 யூரோக்கள் வரை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.