வீட்டுப் பணிப்பெண்ணை துன்புறுத்தியதாக திமுக எம்எல்ஏ மகன் – மருமகள் கைது

by Special Correspondent
0 comment

சென்னையில் வீட்டு வேலைக்கு சென்ற இளம் பெண்ணை தாக்கி, கொடுமைப்படுத்தி வந்த பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினரின் மகன் – மருமகள் கைது.

சென்னை பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆன்ட்ரோ மற்றும் மருமகள் மார்லினா தனது வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணை அடித்து துன்புறுத்தியதாக அளித்த புகாரில் இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த 18 வயதுடைய 12 வகுப்பு படித்த இளம்பெண் ஒருவர் குடும்பச் சூழல் காரணமாக இடைத்தரகர் மூலமாக திமுக எம்எல்ஏ வீட்டிற்கு வேலைக்கு சேர்ந்தார். 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளதால் அப்பெண்ணை அவர்களே மேல் படிப்பு படிக்கச் வைப்பதாக கூறியிருக்கிறார்கள்.

வேலைக்கு சேர்ந்த இரண்டு நாட்களில் வேலை பிடிக்கவில்லை என்றும், தன்னை தனது சொந்த ஊரான உளுந்தூர்பேட்டைக்கு திருப்பி அனுப்புமாறும் கேட்டுள்ளார்.

வேலை பிடிக்கவில்லை ஊருக்கு திரும்ப செல்கிறேன் என்று கூறியவரை திரும்ப அனுப்ப மறுத்து வீட்டில் அடைத்து வைத்து சித்தரவதை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், அவரது கை,  கன்னம், முதுகு ஆகிய இடங்களில் தீயினால் சூடு வைத்து, தலை முடியை வெட்டியும் கொடுமைப்படுத்தியுள்ளனர்..

சமையல் வேலை உள்பட அனைத்து வீடு வேலைகளையும் அவர் ஒருவரை மட்டும் செய்ய வைத்ததோடு, சொன்ன வேலையை செய்யாவிட்டால் அவருக்கு சிகரெட்டில் சூடும் வைத்ததாகவும், செருப்பு, துடைப்பம் ஆகியவற்றை கொண்டும் தாக்கியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.

அதோடு, அப்பெண்ணின் செல்போனையும் பிடுங்கி வைத்து கொண்டு வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்யுமாறும் கட்டாயப்படுத்தியுள்ளனர். நடந்ததை வெளியே கூறினால் அவர்குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொன்று விடுவேன் என்றும் மிரட்டியுள்ளனர்.

கடந்த 7 மாதங்களாக வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்யப்பட்ட அவர், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவர் சொந்த ஊருக்குச் சென்றிருந்த போது அவரின் உடல் முழுக்க காயங்களை கண்ட பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் அதிர்ச்சியடைந்து விசாரித்த போது இந்த உண்மைகள் வெளிவந்துள்ளன. இதனையடுத்து, உடனடியாக அவரை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

இது தொடர்பாக உளுந்தூர்பேட்டை காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். மேலும், குற்றம் நடந்தாக கூறப்படும் சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள திருவான்மியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

திமுக எம்எல்ஏ மகன் ஆண்ட்ரோ மதிவாணன் அவரது மருமகள் மெர்லின் இந்த இருவர் மீது நீலாங்கரை காவல்துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காவல்துறையில் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால், சமூக வலைத்தளத்தில் சிறுமி தரப்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் நீலாங்கரை மகளிர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஆண்டோ மதிவாணன் அவரது மனைவி மெர்லின் ஆகியோர் மீது எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை சட்ட பிரிவு, குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech