ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமைந்துள்ள பிரபல வணிக வளாகத்தில் மர்ம நபர் நடத்திய கத்திகுத்து தாக்குதல் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள வணிக வளாகத்தில் திடீரென புகுந்த மர்மநபர் அங்கு இருந்த மக்கள் மீது கத்தியால் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், குழந்தைகள் உள்பட பலர் காயமடைந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தாக்குதல் நடத்தியவரை சுட்டுக்கொன்றனர்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கத்தி குத்து நடத்தியவரின் பெயர் ஜோயல் கச்சி (Joel Cauchi) என்றும், அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் தெரியவந்துள்ளது.
குழந்தையின் தாயார் உயிருக்கு போராடி வந்த நிலையில் அங்கிருந்தவர்களிடம் குழந்தையை கொடுத்து அதன் உயிரை காப்பாற்றும்படி கெஞ்சியுள்ளார்.
இதனையடுத்து காயமடைந்த குழந்தையையும் குழந்தையின் தாயாரையும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி தாய் உயிரிழந்தார். குழந்தை காப்பாற்றப்பட்டுள்ளது.
நியூ சவுத் வேல்சின் (New south wales) சுகாதாரத்துறை அமைச்சர் ரயான் பார்க் (Ryan Park) கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் குழந்தையின் உடல்நிலை ஆபத்தான நிலையில் இருந்து முன்னேறி வருவதாக கூறியுள்ளார்.
இந்த தாக்குதல் பெண்களை குறிவைத்து நடந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் காவல்துறை அதிகாரி ஒருவர் “இந்த தாக்குதல் நடத்தியவர் ஆண்களை தவிர்த்து பெண்களை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தியிருக்கிறார்” என்று கூறியுள்ளார்.
திங்கள்கிழமை அன்று ஆஸ்திரேலியாவின் கவர்னர் ஜெனரல் டேவிட் ஹர்லரி வணிக வளாகத்தின் வெளியே மலர்கள் வைத்து உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
வணிக வளாகத்தில் பாதுகாவலராக பணியாற்றிய பாகிஸ்தானை சேர்ந்த பராஸ் தாகிர் கத்திக்குத்து தாக்குதலில் கொல்லப்பட்டார். மேலும், தாக்குதல் நடைபெற்றபோது தாகிரிடம் தற்காப்பிற்காக பாதுகாப்பு ஆயுதங்கள் ஏதுமில்லை என்று கூறப்படுகிறது.
தாக்குதலில் காயமடைந்தவர்களில் இருவர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். தாக்குதலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இச்செய்தி தெரிவிக்கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள்:
தாகிர் (பாகிஸ்தான்), இக்சுவான் செங் (சீனா), ஜேட் யங் (சீனா), டாவ்ன் சிங்கிள்டன், பிக்ரியா டார்ஷியா, ஆஷ்லி குட்.
உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திங்கள்கிழமை தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள அரசு கட்டிடங்களில் தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.