இரண்டாம் உலகப்போரில் நாஜி ஜெர்மனியை வெற்றி பெற்றதன் 79 ஆம் ஆண்டு நினைவு தினம் பிரான்சில் இன்று அனுசரிக்கப்பட்டது.
உலக நாடுகள் இரு அணிகளாக பிரிந்து போரிட்ட இரண்டாம் உலகப்போர் 1939 – 1945 ஆண்டுகளுக்கிடையே நடைபெற்றது.
கடுமையாக நடைபெற்ற போரின் இறுதியில் நேச நாடுகள் நாஜி ஜெர்மனியை வீழ்த்தி போரில் வெற்றி பெற்றன. நேச படைகளிடம் நாஜி ஜெர்மனி நிபந்தனை இன்றி சரணடைந்ததை அடுத்து, ஐரோப்பாவில் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது .
உலகப் போர் முடிவுக்கு வந்த மே 8ஆம் தேதி ஐரோப்பாவில் Victory in Europe Day (V-E Day) என்று அழைக்கப்படுகின்றது.
இதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நிகழ்வுகள் ஐரோப்பா முழுவதும் நடைபெறுவது வழக்கம்.
பிரான்சில் மே மாதம் எட்டாம் தேதி தேசிய விடுமுறை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.
நேச நாடுகள் ஜெர்மனியை வீழ்த்தி வெற்றி பெற்றதன் 79 ஆம் ஆண்டு நினைவு நாள் ஐரோப்பா முழுவதும் இன்று பின்பற்றப்பட்டது.
பிரான்சில் பிரெஞ்சு ராணுவ வீரர்களின் நினைவிடமான Arc du Triumph நினைவிடத்தில் பிரான்ஸ் குடியரசு தலைவர் இமானுவேல் மக்ரோன் இன்று அஞ்சலி செலுத்தினார்
அவருடன் பிரான்சின் பிரதம மந்திரி கப்ரியல் அட்டல், ராணுவ அமைச்சர் செபஸ்தியன் உட்பட பல்வேறு ராணுவ உயரதிகாரிகள் கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்தினர்.