கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய உயிரிழப்பு அதிகரிப்பு!

by Special Correspondent
0 comments

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 98 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 19 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரத்தில் 7-வது வார்டு பகுதியில் கடந்த 18-ம் தேதி சட்டவிரோதமாக விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்த சிலருக்கு கடும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

நேற்று (புதன்கிழமை) இரவு 11 மணியளவு வரையில் அவர்களில் ஒவ்வொருவராக 17 பேர்  உயிரிழந்தனர். 

நள்ளிரவில் இறப்பின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து அதிகாலையில் உயிரிழப்பு 29-ஆக அதிகரித்தது. இதனையடுத்து மேலும் பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

முற்பகலில் இறப்பின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து 36-ஐ தொட்டது. மாலையில் இறப்பு எண்ணிக்கை 40 ஆக உயர்ந்தது. உயிரிழந்தவர்களில் 3 பெண்களும் அடங்குவர். 

hooch

இறந்த 40 பேரில் கருணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் 26 பேரும் அடங்குவர்.

கருணாபுரம் கிராமத்தில் மட்டும் 26 பேர் உயிரிழந்ததால் அந்த கிராமமே ஆழ்ந்த சோகத்தில் மூழ்கியது. இக்கிராமத்தில் 6 தெருக்கள் உள்ளன. ஒரு தெருவுக்கு குறைந்தபட்சம் 4 முதல் 5 பேர் உயிரிழந்திருப்பது கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இவர்களில் 19 பேரின் உடல்கள் அக்கிராமத்தில் உள்ள இடுகாட்டில் ஒரே இடத்தில் வைத்து தகனம் செய்யப்பட்டன. மற்ற 9 பேரின் உடல்கள் அதே இடுகாட்டில் அவர்கள் சமூக வழக்கப்படி அடக்கம் செய்யப்பட்டன. 

இறுதி அஞ்சலிக்காக கருணாபுரம் இடுகாட்டில் மொத்த கிராமமே திரண்டிருந்தது. 

கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் – முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைகள் மற்றும் புதுச்சேரி ஜிப்மரில் 98 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 19 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே காலை முதலே கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பலருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், கடும் வயிற்று வலி இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தமிழக அரசு இந்த விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்துள்ளது. இந்த ஆணையம் தனது விசாரணை அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் சமர்ப்பிக்கும்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெறுவோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ், அவரது தம்பி தாமோதரன் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இருவரிடமும் கள்ளக்குறிச்சி காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

“இறந்தவர்களின் உடல்கள் உடற்கூராய்வு செய்யப்பட்டு குடும்பங்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. உடற்கூராய்வை விரைவாக செய்வதற்காக பிற மாவட்டங்களில் இருந்து மருத்துவ நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும் சிகிச்சையில் இருக்கும் நபர்களின் உயிரை காப்பதற்கு திருச்சி சேலம் உள்ளிட்ட அருகில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைகளில் இருந்து உயர் சிறப்பு மருத்துவர்கள் வந்துள்ளனர்” என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம் எஸ் பிரசாந்த் தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech