தனது முதல் நாள் உரையில் “வரலாறு காணாத அளவில் வேகமாக செயல்படுவேன்” என்று கூறிய அவர், அதற்கேற்றவாறு பதவியேற்ற முதல் நாளே 200 அரசாணைகளில் கையெழுத்திட்டுள்ளார். எல்லை பாதுகாப்பு, ஆற்றல், அமெரிக்கர்களின் வாழ்க்கை செலவை குறைத்தல் போன்ற அதிரடி நடவடிக்கைகள் இதில் அடங்கும்.
வரலாற்றிலேயே மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்புத் திட்டம்!
SoftBank, OpenAI, Oracle ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து ‘ஸ்டார்கேட்’ (Stargate) என்னும் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு தகவல் மையங்களை அமைக்க உள்ளதாக தெரிவித்த அதிபர் டொனால்ட் டிரம்ப், வரலாற்றிலேயே மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டம் அமையும் என்றும் கூறியுள்ளார். இதன் முதல் தகவல் மையம் டெக்சாசில் அமைக்கப்படவிருக்கிறது.
தற்போது 100 பில்லியன் டாலர்களில் தொடங்கப்பட உள்ள இத்திட்டம், அவரது பதவிக் காலத்தில் 500 பில்லியன் டாலர்கள் வரை உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது முறையாக பாரிஸ் காலநிலை உடன்படிக்கையிலிருந்து வெளியேறியது அமெரிக்கா!
தொழில் புரட்சிக்கு முன்பு இருந்தது போல் புவி வெப்பமடைதலை 1.5 டிகிரி செல்சியசுக்குள் வைத்திருக்க வேண்டி, 2015 ஆம் ஆண்டு பாரிஸ் காலநிலை உடன்படிக்கையில் 196 நாடுகள் கையெழுத்திட்டன. ஈரான்,லிபியா,மற்றும் ஏமன் ஆகிய நாடுகள் மட்டும் இதில் பங்கேற்கவில்லை. தற்போது அமெரிக்காவும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது.
பதவியேற்ற முதலில் நாளிலேயே பாரிஸ் காலநிலை உடன்படிக்கையிலிருந்து அமெரிக்காவை வெளியேற்றியுள்ளார் டொனால்ட் டிரம்ப்.
2017 ஆம் ஆண்டில், தனது முதலாவது பதவிக் காலத்திலும் டிரம்ப் இதே போன்று வெளியேறினார். எனினும் அது நடைமுறைக்கு வர 4 ஆண்டுகள் ஆன நிலையில், அவருக்கு அடுத்து வந்த பைடன் அம்முடிவிலிருந்து பின்வாங்கினார். ஆனால் தற்போதைய வெளியேற்ற நடவடிக்கை, ஓராண்டில் நடைமுறைக்கு வர இருக்கிறது.
உலக சுகாதார அமைப்பிலிருந்தும் வெளியேறியது!
அதேபோல் உலக சுகாதார அமைப்பில் இருந்தும் விலக டிரம்ப் ஆணை பிறப்பித்துள்ளார். 2019 இல் கொரோனா வைரஸ் பரவலை திறமையாக கையாளவில்லை என்று குற்றம் சாட்டிய அதிபர் டிரம்ப், உலக சுகாதார அமைப்பிற்கு சீனாவைக் காட்டிலும் அதிக நிதியை அமெரிக்கா தருவதாகவும், அது தனக்கு நியாயமாக படவில்லை என்றும் கூறினார்.
டிரம்பின் இந்த முடிவு வருத்தமளிப்பதாகவும், அமெரிக்கா இம்முடிவை மறுபரிசீலனை செய்யும் என்று நம்புவதாகவும் உலக சுகாதார அமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
பிறப்பின் அடிப்படையிலான அமெரிக்க குடியுரிமை ரத்து!
அமெரிக்க குடியுரிமை பெறாத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமை முறையையும் அதிபர் டிரம்ப் ரத்து செய்துள்ளார். அமெரிக்காவில் பிறக்கும் குழந்தையின் பெற்றோரில் யாரேனும் ஒருவர் நிரந்தர அமெரிக்க குடியுரிமை பெற்றிருந்தால் மட்டுமே அந்தக் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு லட்சக்கணக்கான இந்தியர்களை பாதிக்கும் அறிவிப்பாகும். இதனை எதிர்த்து 20க்கும் மேற்பட்ட அமெரிக்க மாகாணங்கள் வழக்கு தொடுத்துள்ளனர். பல மனித உரிமை வழக்கறிஞர்களும் இதனை எதிர்த்து நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
எனினும் H1B விசாவிற்கு டிரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார். இதன் மூலம் திறமையானவர்கள் அமெரிக்காவிற்குள் வருவதை வரவேற்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
சீனாவுக்கு 10% வரி?
மெக்சிகோ மற்றும் கனடாவுக்கு ‘பென்டனில்’ (Fentanyl) என்னும் போதை பொருளை சீனா சட்டவிரோதமாக கடத்துவதால், பிப்ரவரி 1 முதல் சீனாவிற்கு 10% சதவிகித வரி விதிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக கடந்த செவ்வாயன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது முதல் பதவிக்காலத்தின் இறுதியில், சட்டவிரோதமாக சீனாவிலிருந்து பென்டனில் போதைப்பொருள் கடத்துபவர்களுக்கு மரண தண்டனை விதிப்பது குறித்து சீன அதிபர் ஜின்பிங்குடன் பேசியதாகவும், ஆனால், அவருக்கு அடுத்து ஆட்சிக்கு வந்த அதிபர் ஜோ பைடன் அந்த முயற்சியை பின்தொடரவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
மெக்சிகோ, கனடாவுக்கும் வரி உயர்வு எச்சரிக்கை
அமெரிக்க எல்லைக்குள் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் ‘பென்டனில்’ கடத்தலை நிறுத்தவில்லை என்றால் மெக்சிகோ மற்றும் கனடாவுக்கும் பிப்ரவரி 1 முதல் 25% சதவிகித சுங்க வரி நிர்ணயிக்க உள்ளதாகவும், இந்த வரி அமெரிக்க எல்லைக்குள் வரும் போதை பொருட்களை கட்டுப்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.
மெக்சிகோ உடனான அமெரிக்காவின் தெற்கு எல்லையில் தேசிய அவசர நிலையையும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
‘டிக் டாக்’ செயலிக்கு 90 நாட்கள் அவகாசம்
டிக் டாக் செயலியினால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதால் சனிக்கிழமையன்று டிக் டாக் செயலியின் பயன்பாட்டிற்கு தடை செய்து அமெரிக்கா உத்தரவிட்டது. இதனால் பயனர்களால் இச்செயலியை பயன்படுத்த இயலவில்லை.
டொனால்ட் டிரம்ப் அதிபர் பதவி ஏற்கும் முன்னரே இப்பிரச்சினைக்கு தீர்வு காண 90 நாட்கள் அவகாசம் கொடுக்க அரசாணை பிறப்பிக்க உள்ளதாக கூறிய நிலையில் 12 மணி நேரம் கழித்து மீண்டும் டிக் டாக் செயல்பட தொடங்கியது.
பால்புதுமையினர் நிராகரிப்பு
பாலின உரிமைகள் குறித்த தீவிரவாத கருத்தியல்களிலிருந்து பெண்களை பாதுகாக்க, ஆண், பெண் என்ற இரண்டு பாலினத்தை மட்டுமே அமெரிக்க அரசு இனி ஏற்றுக்கொள்ளும் என்று டிரம்ப் அரசாணை பிறப்பித்துள்ளார். இதன் மூலம் டொனால்ட் டிரம்ப், பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சமூக அமைப்புகளை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் வரலாற்றில், சில ஆண்டு இடைவேளைக்கு பின் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபரானவர்கள் வரிசையில் குரோவர் கிளீவ்லாண்டிற்கு (Grover Cleveland) (1884 மற்றும் 1892வில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்). அடுத்து, மீண்டும் அதிபராகியுள்ள டிரம்ப், அதிரடியாக பல அரசாணைகளை வெளியிட்டுள்ளார். இதன் தாக்கம் உலகச் சந்தை பொருளாதாரத்திலும் எதிரொலிக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
டொனால்ட் டிரம்ப், அமெரிக்க வரலாற்றில் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக அமெரிக்க பிரதிநிதிகள் சபையால் பதவி நீக்கப்பட்ட மூன்றாவது அதிபரும், இரு முறை பதவி நீக்கப்பட்ட ஒரே அதிபரும் ஆவார் (2019 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் பதவி நீக்கப்பட்டார்) என்பது குறிப்பிடத்தக்கது.