பிரான்ஸ் நாட்டின் கலைப் பொக்கிஷமாகத் திகழும் பாரிசின் லூவர் அருங்காட்சியகம் மற்றும் சிறுபான்மையின யூத மக்களின் வழிபாட்டுத் தலங்களை இலக்காகக் கொண்டு நடத்தப்படவிருந்த ஒரு மிகப்பெரிய பயங்கரவாதச் சதித் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் (Paris) உள்ள உலகப் புகழ்பெற்ற லூவர் (Louvre) அருங்காட்சியகம் மற்றும் யூத வழிபாட்டுத் தலங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட துனிசியா (Tunisia) நாட்டைச் சேர்ந்த ஒருவரை பிரான்ஸ் பாதுகாப்புப் படையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
பாரிசின் பாதுகாப்பிற்குப் பெரும் சவாலாக அமையவிருந்த இந்தச் சதித் திட்டம் முன்கூட்டியே கண்டறியப்பட்டு முறியடிக்கப்பட்டுள்ளது.
சதித்திட்டத்தின் பின்னணி:
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் (DGSI) மேற்கொண்ட ரகசிய மற்றும் துல்லியமான தேடுதல் வேட்டையில்,பாரிசின் 16-வது மாவட்டத்தில் (16ème arrondissement) பதுங்கியிருந்த அந்த வாலிபர் பிடிபட்டார். முதற்கட்ட விசாரணையில், அவர் பிரான்சில் தங்குவதற்கான முறையான ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாகத் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது. குறிப்பாக, ஒரு குறிப்பிட்ட மதக் குழுவினரையும், பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கூடும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களையும் அவர் தனது இலக்காகத் தேர்ந்தெடுத்துள்ளார் என்பது அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கைப்பற்றப்பட்ட திடுக்கிடும் ஆதாரங்கள்:
இதனிடையே, கைது செய்யப்பட்ட நபரின் கைபேசி மற்றும் மடிக்கணினியை ஆய்வு செய்த புலனாய்வுத் துறையினர் பல அதிர்ச்சியூட்டும் டிஜிட்டல் தடயங்களைக் கண்டறிந்துள்ளனர். அவரது இணையத் தேடல் வரலாற்றை ஆய்வு செய்தபோது, அவர் நீண்ட நாட்களாக “வெடிகுண்டுகளைத் தயாரிப்பது எப்படி” (Comment fabriquer une bombe) என்பது குறித்த செய்முறை விளக்கங்களைத் தேடிப் படித்து வந்துள்ளார்.
மேலும், சர்வதேசத் தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் (ISIS) பயங்கரவாத அமைப்பின் நேரடித் தொடர்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அவரது கைபேசியில் அந்த அமைப்பின் கொடூரமான பரப்புரை காணொளிகள், தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்கான உந்துதல் உரைகள் மற்றும் பல்வேறு நவீன ரகத் தானியங்கி ஆயுதங்களின் நூற்றுக்கணக்கான புகைப்படங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது அவர் வெறும் தனிநபர் தாக்குதல்தாரி (Lone Wolf) மட்டுமல்லாமல், ஒரு பெரிய வலையமைப்பின் பின்னணியில் இயங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.
வெளிநாடு செல்ல முயற்சி:
அந்த நபர் ஏற்கனவே சிரியா (Syrie), மொசாம்பிக் (Mozambique) ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு, அங்குள்ள தீவிரவாதக் குழுக்களில் இணைந்து நேரடிப் போர் பயிற்சியைப் பெறவும் தீவிரமாக முயன்றுள்ளார். பிரான்ஸ் மண்ணில் மிகப்பெரிய அளவிலான உயிர்ச்சேதத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற வன்மத்துடன் அவர் தனது தாக்குதல் வரைபடத்தைத் தயாரித்துள்ளதாகப் புலனாய்வு அமைப்புகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளன.
தற்போது அவர் மீது “பயங்கரவாதச் சதித் திட்டம் தீட்டுதல்” மற்றும் “குற்றவியல் அமைப்புகளுடன் இணைந்து தேசவிரோதச் செயல்களில் ஈடுபடுதல்” ஆகிய கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பாரிசின் பலத்த பாதுகாப்புடைய சிறையில் நீதிமன்றக் காவலில் (Écroué) அடைக்கப்பட்டுள்ளார்.
உச்சகட்ட பாதுகாப்பு எச்சரிக்கை:
கடந்த பிப்ரவரி மாதம் முதல் பிரான்சில் பாதுகாப்பு எச்சரிக்கை மிக உயர்ந்த நிலையான ‘விஜிபைரேட்’ (Vigipirate – Urgence Attentat) நிலையில் வைக்கப்பட்டுள்ளது. உக்ரைன்-ரஷ்யா போர் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக ஐரோப்பா முழுவதும் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவி வரும் நிலையில், இந்தப் புதிய சதி முறியடிப்பு பெரும் முக்கியத்துவம் பெறுகிறது.
பாரிசின் காவல்துறைத் தலைவர் லாரன்ட் நுனேஸ் (Laurent Nuñez) இது குறித்துத் தெரிவிக்கையில், “பாதுகாப்புப் படையினரின் இடைவிடாத கண்காணிப்பு மற்றும் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் மட்டுமே இந்தப் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டுள்ளது. பாரிசின் ஒவ்வொரு முக்கியப் பகுதியும், குறிப்பாக வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் 24 மணிநேரமும் கண்காணிக்கப்படும்” என உறுதியளித்துள்ளார்.
இந்தச் சம்பவம் பாரிசில் வசிக்கும் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியிருந்தாலும், காவல்துறையின் இந்தத் துரித நடவடிக்கை அவர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. பிரான்ஸ் அரசு பயங்கரவாதத்திற்கு எதிராக “பூஜ்ஜிய சகிப்புத்தன்மை” (Zero Tolerance) கொள்கையைக் கடைப்பிடித்து வருவதால், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஈபிள் டவர் முதல் லூவர் வரை அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் கூடுதல் மெட்டல் டிடெக்டர்கள் மற்றும் ஆயுதம் ஏந்திய ராணுவ வீரர்களின் ரோந்துப் பணி அதிகரிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்தின் நிழல் படராமல் பாரிசைப் பாதுகாக்கப் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து விழிப்புடன் செயல்பட்டு வருகின்றனர். இது போன்ற சதித் திட்டங்களை ஆரம்பக் கட்டத்திலேயே கிள்ளி எறிவது மட்டுமே ஒரு நாட்டின் அமைதிக்கு வலு சேர்க்கும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள follow francetamilnews.com