பிரான்சு தமிழ்ச் சங்கத்தின் 54ஆவது ஆண்டு பொங்கல் விழா பிரான்சின் தலைநகரம் பாரீசுக்கு அருகிலுள்ள மலகோப் (Malakoff) நகரத்தில் ஞாயிறு அன்று (11.02.2024) நடைபெற்றது.
உலகத்தமிழர்கள் கடல் கடந்து போனாலும் தாங்கள் செல்லும் நாடுகளிலெல்லாம் தமிழ் சங்கங்களை நிறுவி ஆண்டுதோறும் தங்களது பாரம்பரிய விழாக்களை கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக, பொங்கல் விழா உலகெங்கிலும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிறப்பாக நடைபெறும். 54 ஆண்டுகள் பாரம்பரியமிக்க பிரான்சு தமிழ்ச் சங்கம் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுதோறும் பொங்கல் விழாவினை நடத்தி வருகிறது. பிரான்சு தமிழ்ச் சங்கத்தின் 54-வது பொங்கல் விழா ஞாயிறு (11.02.2024) அன்று மலகோப் நகரத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு வந்தவர்களை பிரான்சு தமிழ்ச் சங்கத் தலைவர் பேராசிரியர் திரு.பா.தசரதன் வரவேற்றார். துணைத்தலைவர் திரு.தளிஞ்சன் முருகையன் விழாவிற்கு தலைமை தாங்கினார். மலகோப் நகர துணை மேயர் திருமதி.கேத்தரீன் மோரீஸ், பிரான்சிலுள்ள இந்திய தூதரக முதன்மை அதிகாரி திரு.கே.ஜி.பிரவீன் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு உரையாற்றினர்.
திரான்சி நகர மன்ற உறுப்பினர் திரு.அலன் ஆனந்தன், பிரான்ஸ் திருவள்ளுவர் கழக தலைவர் திரு. அண்ணாமலை பாஸ்கர், வொரயால் தமிழ் சங்க தலைவர் திரு.இலங்கை வேந்தன், அண்ணாமலை உயர்கல்வி மைய இயக்குனர் பேராசிரியர் முனைவர். சச்சிதானந்தம், கவிதாயினி திக் ஆச்சி, திரு.நெடுமாறன், திரு.கமல்ராஜ் ருவீயே, பிரான்சு தமிழ்ச் சங்க இளைஞர் அணி பொறுப்பாளர் திரு. ஜேஸ் உள்ளிட்ட பலர் பிரான்சு தமிழ் சங்கத்தின் பாரம்பரியத்தையும், தமிழ்ப் பணிகளையும் பாராட்டி வாழ்த்துரை வழங்கி உரையாற்றினர். விழாவில் பரத நாட்டியம், வாய்ப்பாட்டு உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பங்கேற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிறைவாக, பிரான்சு தமிழ்ச்சங்கத்தின் துணைப்பொருளாளர் திருமதி. எலிசபெத் அமல்ராஜ் விழாவில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இவ்விழாவில் பல்வேறு தமிழ் அமைப்புகளின் தலைவர்களும், பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களும் திரளாக கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். விழா ஏற்பாட்டினை பிரான்சு தமிழ் சங்க நிர்வாகிகளும், பிரான்சு தமிழ் சங்க இளைஞர் அணியினரும் சிறப்பாக செய்திருந்தனர்.