இன்டர்போல் காவல்துறை நடத்திய அதிரடி நடவடிக்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட இணைய மோசடிக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சில வாரங்களாக இன்டர்போல் நிறுவனம் வடக்கு ஆப்பிரிக்காவில் இணையத்தில் மோசடியில் ஈடுபடும் பல குற்றவாளிகளை கைது செய்து வருகிறது.
இதுவரை இரண்டு மில்லியன் யூரோக்களும் நூற்றுக்கணக்கான குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
‘ஜேகல்’ என்று பெயரிடப்பட்ட இந்த காவல் நடவடிக்கை வடக்கு ஆப்பிரிக்காவில் கூட்டாக செயல்பட்டு வரும் இணைய மோசடிக்காரர்களை குறி வைத்து நடத்தப்பட்டது.
இந்த அதிரடி நடவடிக்கையில் 2.15 மில்லியன் யூரோக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன மற்றும் 103 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1100 குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 200 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
வன்முறை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் இது போன்ற மாபியா குழுக்கள் இணையத்திலும் பரவலான குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.
மின்னஞ்சல்கள், காதல் வலை, பண மோசடி, கிரெடிட் கார்டு மோசடி, முறைகேடான பணத்தை வெள்ளையாக்கும் பணிகள் போன்றவற்றில் ஈடுபட்டு வந்தனர்.
போர்ச்சுகல் நாட்டில் நான்கு இடங்களில் நடைபெற்ற புலனாய்வுகளில் 1.4 மில்லியன் யூரோக்கள் கைப்பற்றப்பட்டன.
அயர்லாந்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 34 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த காவல்துறையின் நடவடிக்கையில் 21 நாடுகள் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.