புதுவை பொதுப்பணித்துறை அமைச்சர் மாண்புமிகு இலட்சுமி நாராயணன் அவர்களுக்கு பிரான்சில் தமிழ் அமைப்புகள் சார்பாக வரவேற்பு விழா நடத்தப்பட்டது.
பிரான்சில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவிற்கு வருகை தந்த புதுவை அமைச்சர் இலட்சுமி நாராயணன் அவர்களை வரவேற்கும் விதமாக பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பிரான்ஸ் தமிழ் அமைப்புகள் சார்பாக வரவேற்பு விழா நடைபெற்றது.
பாரீஸ் கார் தி நோரில் (Gare du Nord) நடைபெற்ற இவ்விழாவில் பல்வேறு தமிழ் அமைப்பினர் பங்குபெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பிரான்சு எம் ஜி ஆர் பேரவை தலைவரும், இக்கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான முருகு பத்மனாபன், பிரான்ஸ் தமிழ் சங்க தலைவர் தசரதன், பேராசிரியர் தளிஞ்சன் முருகையா, நஜிம், சங்க தலைவர்கள் சக்தி புயல், அலன் ஆனந்தன், கோவிந்தசாமி ஜெயராமன், அண்ணாமலை பாஸ்கர், இலங்கை வேந்தன், தம்புசாமி கிருஷ்ணராஜ், அமிர்தீன் பாருக், மணிமாறன், மணிபாலன், மோரிஸ் ஜெரால்டு, தெய்வபிராகசம்,பிரபுராம், ரமணி பூபதி, ருவியர் கமல்ராஜ், டேவிட் அன்பன், அட்லண்டா ரமேஷ், ஜக்கிரியா, பழனிசாமி சபேசன், குமணன், செல்வா, ஜேஸ் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பிரபு, அசோகன், ராமதாஸ், சந்திரமவுலி, பச்சையப்பன், செல்வம், ராமு, கலியப்பெருமாள், பூங்குழலி பெருமாள், திருமதி. சக்திவேல், எலிசபேத் அமல்ராஜ், தட்சணமுர்த்தி, முஜாவிது, உதயகுமார், பாலகந்தன், சரவணன், கிரி, தேவேந்திரன், ஹபீப், பக்ருதீன், வேலாயுதம் மற்றும் தமிழ் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டு அமைச்சருக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்று சிறப்பித்தனர்.
பிரான்சில் வாழும் புதுவை தமிழர்கள் நலனுக்காக புதுவை அரசின் சார்பாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்த அமைச்சர் திரு.இலட்சுமி நாராயணன், தமிழ் அமைப்பினர் குறிப்பிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு புதுவை அரசு ஆவண செய்யும் என உறுதியளித்தார்.
‘கலைஞர்களை ஊக்குவிக்கும் மாநிலமாக புதுவை அரசு விளங்குகிறது. முதலமைச்சர் திரு.ரங்கசாமி அவர்கள் இதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். புதுவை தமிழர்கள் மிகுதியாக வசிக்கும் பிரான்ஸ் நாடு புதுவையின் ஐந்தாவது பகுதி. தமிழர்கள் நலனில் எப்போதும் புதுவை அரசு அக்கறை கொண்டுள்ளது’ எனவும் குறிப்பிட்டார்.
மேலும் பேசிய அமைச்சர், பிரான்சைச் சேர்ந்த தமிழ் நகரமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து புதுவை அரசு செயல்பட உள்ளதாகவும், அதற்கான திட்டங்கள் தீட்டப்பட உள்ளதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய பிரான்ஸ் தமிழ் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் திரு.தசரதன் பிரெஞ்சிந்திய சங்கங்களின் கூட்டமைப்பினை மீண்டும் செயல்படுத்த உள்ளதாக கூறியதோடு, பிரான்சுக்கு இந்திய கலாச்சார மையத்தின் தேவையையும், அதற்கான நீண்ட நாள் கோரிக்கை குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.
தமிழ் அமைப்பின் தலைவர்களும், நிர்வாகிகளும் அமைச்சருக்கு பொன்னாட்டை போர்த்தி, பூங்கொத்துகள் வழங்கி சிறப்பித்தனர்.
அமைச்சருக்கு பேராசிரியர் சக்தி புயல் வாழ்த்து மடலினை வழங்கினார்.
பிரான்ஸ் தமிழ் அமைப்புகளுடன் நீண்ட நேரம் கலந்துரையாடிய அமைச்சர், அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்ததோடு அதற்கான வழிகாட்டுதல்களையும் வழங்கினார்.
மேலும், புதுவை தமிழ் அமைப்புகளை ஒன்றுக்கூட்டி கூட்டமைப்பு ஒன்றினை நிறுவ உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
விழாவில் பங்கேற்றவர்களுக்கு எம்.ஜி.ஆர். பேரவையின் தலைவர் திரு. முருக பத்மநாபன் நன்றி கூறினார்.