பிரான்சிலேயே முதல் முறையாக திருவள்ளுவரின் முழு திருவுருவச்சிலை செர்ஜி (Cergy) நகரத்தில் பிரெஞ்சிந்திய தமிழ் அமைப்பால் நிறுவப்பட்டுள்ளது.
தமிழர்களின் பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவருக்கு உலகெங்கிலும் பல்வேறு அமைப்புகளால் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.
பிரான்சிலேயே முதன்முறையாக செர்ஜி நகரிலுள்ள பிரான்சுவா மித்ரான் பூங்காவில் (Parc François Mitterrand, Cergy Préfecture) ஐயன் திருவள்ளுவருக்கு முழு திருவுருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது.
வொரேயால் தமிழ் கலாச்சார மன்றத்தால் (Association Culturelle Des Tamouls De Vauréal) நிறுவப்பட்டுள்ள இந்த திருவள்ளுவர் சிலையை சனிக்கிழமையன்று (09/12/2023) புதுவையின் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் புதுச்சேரி அரசின் சார்பில் திறந்து வைத்தார்.
இவ்விழாவில் செர்ஜி மாநகர தலைவர் ழான் போல் ழாந்தாம், புதுவை அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. லட்சுமி நாராயணன், இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் திரு. செந்தில் தொண்டைமான், புதுவை மேனாள் சட்டப் பேரவைத் தலைவர் வி.பி. சிவக்கொழுந்து, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முனைவர் இரா. குறிஞ்சிவேந்தன், குறும்பட இயக்குநர் ரவி குணவதி மைந்தன், இந்தியாவிற்கான பிரான்ஸ் தூதுவர் திரு. ஜாவேத் அஷ்ரப், மற்றும் புதுவையை சேர்ந்த சிற்பி பத்மஶ்ரீ திரு. முனுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இவ்விழாவில் தமிழகத்திலிருந்து வந்திருந்த பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
கொட்டும் மழையிலும் ஏராளமான பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் மற்றும் மாணவர்கள் சிலை திறப்பு விழாவில் பங்கேற்றனர்.
சிலை திறப்பினைத் தொடர்ந்து, விழா அரங்கத்தில் மாணவ-மாணவிகளின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை வொரெயால் தமிழ் கலாச்சார மன்றத்தின் தலைவர் இலங்கை வேந்தன், செயலாளர் அலன் கிருஷ்ணராஜ், பொருளாளர் வேல்முருகன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உட்பட அமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் சிறப்பாக செய்திருந்தனர்.
செர்ஜியில் திறந்து வைக்கப்பட்ட இந்த சிலை தான் பிரான்சின் முதல் திருவள்ளுவர் சிலை என்பது குறிப்பிடத்தக்கது.