அரசு மருத்துவமனை டாக்டரிடம் 20 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கைதான அமலாக்கத்துறை அதிகாரியின் ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் அரசு மருத்துவமனையின் மருத்துவராக பணியாற்றி வருபவர் சுரேஷ் பாபு. இவர் மீது கடந்த 2018-ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில் வழக்கை மீண்டும் விசாரிக்க இருப்பதாகவும், விசாரணை நடத்தாமல் இருக்க வேண்டுமானால் ரூ. 51 லட்சம் வழங்க வேண்டும் என மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி கூறியுள்ளார்.
இதையடுத்து, முதற்கட்டமாக ரூ. 20 லட்சத்தை மருத்துவர் சுரேஷ் பாபுவிடமிருந்து கடந்த மாதம் வாங்கியுள்ளார்.
இரண்டாம் தவணையாக ரூ. 20 லட்சத்தை டிசம்பர் 1 ஆம் தேதி பெற்றுக்கொண்டு திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு காரில் சென்ற போது லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்த பணமும், பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து அவரிடம் 15 மணி நேரம் விசாரணை நடத்திய காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை 15 நாள் காவலில் சிறையில் அடைத்தனர்.
அதோடு, அவரது வீடு மற்றும் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்ட அங்கித் திவாரியின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி இந்த வழக்கு ஆரம்ப நிலையில் இருப்பதால் ஜாமீன் வழங்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.