பயன்படாத சோபாவை விற்ற நபர் அதில் ஒளித்து வைத்திருந்த 18000 யூரோக்கள் மதிப்புள்ள பணத்தை இழந்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் குயீன்ஸ்லாண்ட் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற நபரொருவர் தன்னுடைய வீட்டை ஒழுங்கப்படுத்த விரும்பினார்.
வீட்டில் தேவையற்ற பழைய நாற்காலிகள், அறை கலன்களை புதிதாக மாற்ற முடிவெடுத்த அவர், அங்கிருந்த லெதர் சோபாவின் ஐந்து பகுதிகளில் மூன்று பகுதிகளை மாற்றுவதற்காக தேர்ந்தெடுத்துள்ளார்.
அந்த சோபாவின் இரண்டு பகுதிகளில் தன்னுடைய வாழ்நாள் சேகரிப்பான 30 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர்களை அவர் ஒளித்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
சோபாவை விற்க முன்வந்தும் அதை யாரும் வாங்க முன்வராததால், பயன்படுத்தப்பட்ட பொருட்களை விற்கும் கடையில் சோபாவின் மூன்று பகுதிகளை கொடுத்துள்ளார்.
சில வாரங்கள் கழித்து அவருக்கு பணம் குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே அவர் அவரிடமிருந்த சோபாவின் மற்ற பாகங்களை சோதித்து பார்த்துள்ளார். ஆனால், அவருக்கு அதிர்ச்சியே மிஞ்சியது.
தான் சிறுக சிறுக சேர்த்த பணத்தை ஒளித்து வைத்திருந்த சோபாவை தான் அவர் கடையில் விற்றது அவருக்கு புரிய வந்தது.
உடனடியாக கடையின் நிர்வாகத்தை தொடர்புகொண்ட அந்த நபருக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது.
அந்த சோபாவை வேறொரு நபர் வாங்கி சென்றதாகவும், அவர்களே வந்து வாங்கி சென்றதால் அவர்களை பற்றிய விவரங்கள் எதுவும் தங்களுக்கு தெரியாது எனவும் கூறியுள்ளனர்.
இதனையடுத்து அவர்களை கண்டுபிடித்து தன்னுடைய பணத்தை மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ள அவர், இணையத்தில் இச்சம்பவம் குறித்த தகவல்களை பதிவிட்டு வருகிறார்.
‘அதில் கொஞ்சமாவது எனக்கு கிடைத்தால் எனக்கு மகிழ்ச்சி. ஆனால், அது நேர விரயம் என்றும் எனக்குத் தோன்றுகிறது’ என்று ஆஸ்திரேலிய ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
‘நான் இந்தளவு முட்டாளாக இருப்பேன் என்று என்னால் நம்ப முடியவில்லை’ என்றும் பரிதாபமாக குறிப்பிடுகிறார் அவர்.