இங்கிலாந்தின் புதிய அரசராக பொறுப்பேற்றுள்ள சார்லசும், அரசியான கமிலாவும் பிரான்சுக்கு வருகைத் தர உள்ளனர்.
கடந்த மார்ச் மாதமே திட்டமிடப்பட்டிருந்த அவர்களின் வருகை சில சிக்கல்களால் தள்ளி போடப்பட்டிருந்த நிலையில், செப்டம்பர் மாதம் அவர்கள் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அரசராக முடிசூடப்பட்ட மூன்றாம் சார்லசும், அவரின் துணைவியான அரசி கமிலாவும் வருகின்ற செப்டம்பர் மாதம் 20 – 22 தேதிகளில் பிரான்சுக்கு வரவுள்ளதாக பிரெஞ்சு அரசு தெரிவித்துள்ளது.
அரச பொறுப்பேற்றபின் முதல் முறையாக மன்னர் சார்லசும், அரசி கமிலாவும் பிரான்சுக்கு வரும் இந்நிகழ்வில், அவர்கள் பொர்தோ (Bordeaux) நகருக்கும் செல்லவுள்ளதாக பிரிட்டன் தூதரகம் தெரிவித்துள்ளது.
மார்ச் மாதம் ஓய்வூதிய திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் இங்கிலாந்து அரசின் வருகை ஒத்திவைக்கப்பட்டது.
இங்கிலாந்து அரசராக பொறுப்பேற்றபின் சார்லஸ் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ் வரும் இங்கிலாந்து மன்னருக்கு சிறப்புமிக்க அரசு விருந்து வெர்சாய் அரண்மனையில் வழங்கப்படும் என்றும், மேற்படி விவரங்கள் விரைவில் உறுதிப்படுத்தப்படும் என்றும் பிரிட்டன் தூதரம் தெரிவித்துள்ளது.
பட்டத்து இளவரசராக மன்னர் சார்லஸ் 1970-ஆம் ஆண்டு முதல் அலுவல்பூர்வமாக பிரான்சுக்கு 34 முறை வந்துள்ளார்.
அவருடைய தாயாரான இங்கிலாந்து அரசியான இரண்டாம் எலிசபெத், தன்னுடைய 70 ஆண்டு ஆட்சிக்காலத்தில் ஐந்து முறை பிரான்சுக்கு வருகை தந்துள்ளார்.
அரசி எலிசபெத்தின் மறைவின் போது மன்னர் சார்லசை சந்தித்த பிரான்சு அதிபர் மக்ரோன், அவரை பிரான்சுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.