ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மத்திய அரசு கடிவாளம் போடாவிட்டால் தமிழ்நாடு மக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் மூலம் திமுக அமைச்சர்களை குறிவைத்து பாஜக செயல்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாநில அரசு நிர்வாகம் சுமூகமாக செயல்படுவதை அனுமதிக்கக்கூடாது என செயல்படுகிறார். தமிழ்நாடு அரசின் மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளை ஆளுநரால் ஜீரணிக்க முடியவில்லை” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்க ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்து இருந்தார்.
ஆனால் செந்தில் பாலாஜி மீது வழக்குகள் உள்ளதால் இலாகா இல்லாத அமைச்சராக நியமனம் செய்ய முடியாது என ஆளுநர் தெரிவித்திருந்த நிலையில் செந்தில் பாலாஜி தொடர்வார் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
இதற்கு ஆளுநர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கியதாக சில தினங்களுக்கு முன்பு முதல்வருக்கு ஆளுநர் கடிதம் அனுப்பி இருந்தார். இந்த சூழலில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அரசியல் சட்டத்தின் படியே நீக்கியதாக முதலமைச்சருக்கு எழுதிய முதல் கடிதத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருந்தார்.
முதலமைச்சரின் பரிந்துரை இல்லாமல் அமைச்சரை நீக்க முடியாது என்ற சட்டத்தை சுட்டிக்காட்டி ஆளுநருக்கு திமுகவினரும் அவர்களது கூட்டணிக் கட்சிகளும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
பின்னர் அந்த முடிவை நிறுத்தி வைப்பதாக மீண்டும் ஒரு கடிதத்தை முதல்வருக்கு ஆளுநர் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.
செய்தி : ஹிந்துஸ்தான் டைம்ஸ் – ஜூலை 03