பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை கடந்த 6 ஆண்டுகளாக கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட சபரி ராஜன் என்கிற ரிஷ்வந்த், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்த் குமார், மணி என்கிற மணிவண்ணன், பாபு, ஹரோனிமஸ் பால், அருளானந்தம், அருண்குமார் ஆகிய 9 பெரும் குற்றவாளிகள் என அரசு தரப்பில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், நீதிபதி நந்தினி தேவி குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார்.
குற்றவாளிகளின் தண்டனை விவரங்கள் பிற்பகலில் வெளியிடப்பட்டன. அதன்படி 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோடு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 85 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், குற்றவாளிகளுக்கு 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை அபராத தொகை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அரசுத்தரப்பு வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் கூறும்போது ‘குற்றம் சாட்டப்பட்ட 9 பேர் மீது கூட்டுப் பாலியல் வன்கொடுமை, பெண்ணை மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது போன்ற பல குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. தடயவியல் ஆதாரங்களும்; சம்பவம் நடந்த இடம் மற்றும் வீடியோக்கள் பதிவு செய்யப்பட்ட நேரத்தை ஒத்துப்போகின்றன. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் 48 பேர் முன்வைத்த சாட்சிகள் அறிவியல் பூர்வமாக ஆராயப்பட்டன. இதில் ஒருவர் கூட பிறழ் சாட்சியாக மாறவில்லை. குற்றவாளிகளால் அழிக்கப்பட்ட வீடியோக்களும் மீட்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டனர். வீடியோக்களின் உண்மைத்தன்மை ஆராயப்பட்ட பின்பே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே மேல்முறையீடு செய்தாலும் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனை உறுதி செய்யப்படும் ’ என்று கூறினார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி பிரியா (பெயர் மாற்றப்பட்டது) என்னும் 19 வயது பெண், ரிஸ்வந்த் என்பவரும் அவருடைய நண்பர்கள் நால்வரும் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, அதை வீடியோ பதிவு செய்து காட்டி மிரட்டுவதாக பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
இதன் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது. காவல் துறையினரால் விசாரிக்கப்பட்ட பின், இந்த வழக்கு சிபிசிஐடிக்கும் பிறகு சிபிஐக்கும் மாற்றப்பட்டது.
கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் 9 பேர் மீது கோவை மகளிர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் 2023 ஆம் ஆண்டு நீதிபதி நந்தினி தேவி முன்னிலையில் சாட்சி விசாரணை தொடங்கியது. ஆன்லைன் மூலமாக சாட்சியங்கள் பெறப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் காணொலி மூலம் விசாரிக்கப்பட்டு வந்தனர்.
கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்த விசாரணையின் முடிவில், சாட்சி விசாரணைகள், அரசு மற்றும் எதிர்த்தரப்பு இறுதி வாதங்கள் நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.