2300 ஆண்டுகளுக்கு முன் செல்டிக் இன மக்கள் பயன்படுத்திய ஸ்வஸ்திகா முத்திரையுடன் கூடிய வாள்கள் பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
செல்ட்டிக் (Celts) மக்கள் ஐரோப்பாவில் இரும்புக் காலத்திலும் (Iron age), நடுக்காலத்திலும் (medieval) வாழ்ந்த பழங்குடி சமுதாயங்களை உள்ளடக்கிய ஒரு இன-மொழிக் குழுவினர். இவர்கள் செல்ட்டிய மொழிகளைப் பேசியதுடன் ஒரே வகையான பண்பாடுகளையும் கொண்டிருந்தனர். இவர்கள் இன்றைய அயர்லாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், கலீசியா, கார்ண்வால், பிரட்னி (Breton), மன் தீவு போன்ற இடங்களில் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.
பிரான்சில் க்ரூசியர்-லெ-நியூஃப் (Creuzier-le-Neuf) என்ற இடத்தில் உள்ள இடுகாட்டில் (necropolis) பிரெஞ்சு தேசிய தொல்லியல் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தை (French National Institute of Preventive Archeological Research [INRAP]) சேர்ந்த அகழ்வாராய்ச்சியாளர்கள் நடத்திய அகழாய்வில் ஸ்வஸ்திகா முத்திரை பதித்த 2 உடைவாள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட வாள்கள் உறைகளுக்குள் வைக்கப்பட்டிருந்தன. அதில், செம்பு கலவையால் செய்யப்பட்ட ஒரு வாளின் உறை, நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்தது. இடுப்பை சுற்றி கட்டிக் கொள்ளும் வகையில் தனித்துவமாக வடிவமைக்கப்பட்டிருந்த அந்த உறைகளின் விளிம்புகளில் பளபளப்பான ரத்தினங்கள் பதிக்கப்பட்டிருந்தன. இதில் இரு உறைகளில் ஸ்வஸ்திகா சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. எனினும் இந்த ஸ்வஸ்திகா முத்திரைகளின் முக்கியத்துவம் குறித்து இன்னும் அறியப்படவில்லை.

ஏற்கனவே மூன்று ஆண்டுகளுக்கு முன் 2022ஆம் ஆண்டில் வின்சென்ட் ஜார்ஜின் (Vincent Georges) அகழ்வாராய்ச்சி குழு, க்ரூசியர்-லெ-நியூஃப் (Creuzier-le-Neuf) என்னும் பகுதியில் நடைபெற்ற அகழாய்வில் வாள்கள் மற்றும் ஈமச்சடங்கு பொருட்களை கண்டெடுத்தது குறிப்பிடத்தக்கது.
க்ரூசியர்-லெ-நியூஃப் என்பது 1500 பேர் வாழும் சிறிய நகரமாகும். இரும்பு காலத்தில் (கிமு 450 முதல் 52 வரை) இந்நகரம், செல்டிக் ஆர்வெர்னு (Arvernu), ஏடூய் (Aedui), பிடுரிஜிஸ் (Bituriges) என்ற மூன்று முக்கிய பழங்குடி இனத்தவர்களின் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக விளங்கியது.
இந்த கண்டுபிடிப்பு பிரெஞ்சு தேசிய தொல்லியல் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவன குழுவின் அகழ்வாராய்ச்சிக்கு கிடைத்த வெற்றி என்று கூறலாம். இவர்கள் இந்த இடுகாட்டில் சுமார் 7000 சதுர அடி வரையிலான பரப்பளவில் சுமார் 100 கல்லறைகளை கண்டுபிடித்துள்ளனர். இங்கே இருக்கும் மண் அதிக அமிலத்தன்மை கொண்டதாக இருப்பதால் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லறைகள் கொண்ட இந்த இடுக்காட்டு பகுதியில் பண்டைய காலத்து எலும்பு கூடுகளின் எச்சங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
‘ஐரோப்பாவில் இது போன்ற உடைவாள்கள் உள்ளன’ என்று பிரெஞ்சு தேசிய தொல்லியல் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் (French National Institute of Preventive Archeological Research [INRAP]) லைவ் சயின்சில் (Live Science) வெளிவந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இவற்றுடன் கல்லறை கலைப்பொருட்கள், ஆடைகளில் பயன்படுத்தப்படும் ஊக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிலவற்றில் மெருகேற்றப்பட்ட ரத்தினங்களும் பதிக்கப்பட்டிருந்தன.
ஸ்வஸ்திகா முத்திரையின் முக்கியத்துவம்:
ஸ்வஸ்திகா முத்திரைகள் ஹிட்லரின் நாஜி ஆட்சியோடும் இரண்டாம் உலகப்போரின் கொடூரங்களோடும் தொடர்புடையதாக இருந்தாலும் ஒவ்வொரு கலாச்சாரத்திலும் இதன் முக்கியத்துவம் வெவ்வேறு விதமாக இருந்திருக்கிறது. எடுத்துக்காட்டாக, மத்திய தரைக் கடல் பகுதிகளில், கி.மு நான்காம் நூற்றாண்டு மற்றும் ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பிய பெருநிலப்பகுதிகளில் ஸ்வஸ்திகா முத்திரைகள் அணிகலன்களில் அலங்கார வடிவமைப்புகளாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர் மற்றும் நெக்ரோபோலிஸ் அகழ்வாராய்ச்சியின் நிர்வாகி வின்சென்ட் ஜார்ஜஸ் கூறினார்.
இந்த அகழ்வாராய்ச்சி மூலம் பெரும்பாலான கல்லறைகளில் இருந்து உலோக அணிகலன்கள் மற்றும் நகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சேதமடைந்த நிலையில் 18 ஊக்குகள் மற்றும் செம்பு உலோக கலவையினால் ஆன காப்புகளும் (BRACELETS) அடங்கும்.
அவற்றில் குறிப்பாக ஒரு ஊக்கில் மெருகேற்றப்பட்ட ரத்தின கற்கள் பொறிக்கப்பட்டிருந்தன. இந்த இரத்தின கற்கள் மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அல்லது நான்காம் நூற்றாண்டின் இறுதியில் செய்யப்பட்டிருக்கலாம் என்று அகழ்வாராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
வாள்களில் பொறிக்கப்பட்டுள்ள ஸ்வஸ்திகா முத்திரைகளாலும் அவற்றின் வேலைப்பாடுகளாலும் அவை அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றன.