கல்வி நிறுவனங்களில் உள்ள சாதி பெயர்களை 4 வாரங்களுக்குள் நீக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. உத்தரவை மீறினால் அவற்றின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தை நிர்வகிக்க தமிழ்நாடு அரசு சிறப்பு அதிகாரி நியமித்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அச்சங்கம் சார்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாரத சக்கரவர்த்தி, அரசு அல்லது தனியார் நடத்தும் பள்ளி கல்லூரிகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் இடம்பெற்றுள்ள சாதி பெயர்களை நான்கு வாரங்களுக்குள் நீக்க வேண்டும், இல்லாவிட்டால் அப்பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு அங்கு படிக்கும் மாணவர்கள் வேறு கல்வி நிறுவனங்களுக்கு மாற்றப்படுவர் என்று அதிரடியாக உத்தரவிட்டார்.
மேலும், சாதியின் பெயரால் இயங்கும் சங்கங்கள், சாதியை வளர்க்கும் எண்ணத்துடன் தொடங்கப்பட்ட சங்கங்களை பட்டியலிட்டு, சங்கங்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயரை நீக்க அவற்றுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும், இந்த பணிகளை மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும், பிறப்பித்த உத்தரவை பின்பற்றாத சங்கங்களை சட்டவிரோதமானவை என்று அறிவித்து அவற்றின் பதிவை ரத்து செய்ய வேண்டும் என்றும், இனி வரும் நாட்களில் சாதியின் பெயரால் எந்த சங்கத்தையும் பதிவு செய்யக்கூடாது என்றும் அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்புமாறு பதிவுத்துறை இயக்குனருக்கு நீதிபதி ஆணையிட்டார்.
அத்துடன், ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் வெளியிடப்பட்ட பரிந்துரைகளில் கூறப்பட்டது போல் அரசு கள்ளர் சீர்திருத்த பள்ளி, ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் ‘அரசு பள்ளிகள்’ என பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும், மேலும் பள்ளிக்கு நன்கொடை வழங்கும் நன்கொடையாளர்களின் சாதியை தவிர்த்து அவர்களின் பெயர்கள் மட்டும் இடம்பெற வேண்டும் என்றும் ஆணையிட்டதோடு, உடனடியாக ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவும் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், மத அமைப்புகளை தாண்டி சாதிய அமைப்பு ஊடுருவும் ஆற்றலை கொண்டுள்ளது. மக்கள் இந்த சாதியை இறக்கி வைக்க தயாராக இல்லை, இவர்களை விட்டால் சாதியை பெருமையை நிலவில் கூட நிலைநாட்டி விடுவார்கள் என்று கூறிய நீதிபதி, ஏழைகளுக்கான கல்வி நிதியம் (Poor Educational Fund) என்னும் அமைப்பில் கிறிஸ்துவ மதத்தின் கத்தோலிக்க பிரிவில் உள்ள கவரா (Gavaras), பலிஜா (Balijas), தெலகா (Telagas) போன்ற சாதிகளை சேர்ந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதையும் நீதிபதி வருத்தத்துடன் சுட்டிக்காட்டினார்.