Thursday, January 15, 2026

அலகாபாத் நீதிமன்ற கருத்துக்களை கண்டித்த உச்ச நீதிமன்றம்!

by Special Correspondent
0 comments

வழக்குகளை விசாரிக்கும் போது நீதிபதிகள் கவனமாக தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும் என்று நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்றம்  அறிவுறுத்தியுள்ளது.

நாட்டின் மிகவும் பழம்பெரும் நீதிமன்றங்களில் ஒன்றான அலகாபாத் உயர்நீதிமன்றம் அண்மைக் காலமாக தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. அண்மையில் நடந்த வன்கொடுமை வழக்கின் ஒரு நபர் நீதிமன்ற அமர்வில் பெண்களின் மார்பகங்களை பிடிப்பதும், கீழாடைகளின் நாடாவை அவிழ்ப்பதும் பாலியல் வன்புணர்வு முயற்சியாக கருத முடியாது என்று நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா கருத்து கூறியது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சாலையில் சிறுமியிடம் அத்துமீறியதாக குற்றம் சாட்டப்பட்ட இருவரின் செயலை ‘பெண்ணின் மாண்பை அவமதிக்கும் செயல்’ என்று நீதிபதி மிஸ்ரா தீர்ப்பளித்திருந்தார்.

அதே நீதிமன்றத்தில் மற்றொரு நீதிபதியான சஞ்சய் குமார் சிங், வேறொரு வழக்கில் பாலியல் வன்கொடுமை குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கியதோடு பாதிக்கப்பட்டவர் தமக்கு தாமே தீங்கு ஏற்படுத்திக்கொள்ளும் வகையில் நடந்திருக்கிறார் என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் மீதே குற்றம் சாட்டியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து மார்ச் 17ஆம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்தியது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. ‘அலகாபாத் நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது?, மீண்டும் மீண்டும் அதே நீதிமன்றத்திலிருந்து இது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. இது போன்ற வழக்குகளை நாம் மிகவும் கவனமாக அணுக வேண்டும்’ என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தினர். 

அரசு தரப்பு அறிக்கையின்படி பாதிக்கப்பட்ட சிறுமிக்கு லிப்ட் (lift) கொடுத்த இருவர் திடீரென்று அவரிடம் தகாத முறையில் நடந்துகொண்டதோடு, கீழாடையின் நாடாவை இழுக்க முயன்றுள்ளனர். இந்த தகாத செயலை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் உடனடியாக தடுக்க முயன்ற போது அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

“சம்பவ இடத்தில் யாரும் இல்லையென்றால் நிச்சயமாக வன்புணர்வு நடந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் வன்புணர்வு செய்யும் நோக்கத்துடன் நடந்துள்ளது தெளிவாகிறது. எனவே இதனை வெறும் அவமதிப்பு வழக்காக கருத இயலாது” என்று பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பு  வழக்கறிஞர் எச்.எஸ் பூல்கா வாதிட்டார். 

இரு தரப்பையும் விசாரித்த நீதிபதிகள் அலகாபாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு உணர்வின்றியும் மனிதாபிமானமற்றதாகவும் உள்ளதென்று கூறி, அத்தீர்ப்புக்கு  இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். 

‘அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பின் சில பத்திகள் சட்டத்திற்கு உட்பட்டதாக தெரியவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களின் நோக்கம் வன்புணர்வு செய்வது மட்டும் தான் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி தெரிகிறது. மேலும் அச்சிறுமி அனுபவித்த வேதனை தெளிவாக விளக்கப்பட்ட பிறகும் நீதிபதி எழுதிய தீர்ப்பு மிகவும் பொறுப்பற்ற முறையில் உள்ளது’ என்றும் உச்சநீதிமன்றம் அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை காட்டமாக விமர்சித்துள்ளது.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech