லாஸ் ஏஞ்சல்சின் வடக்கு பகுதியில் மீண்டும் புதிதாய் உருவாகியுள்ள காட்டுத் தீ, மேலும் இரண்டு மாகாணங்களுக்கு மிக வேகமாய் பரவியுள்ளது.
நிலைமை இன்னும் மோசமடையும் என்று வானிலையியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
லாஸ் ஏஞ்சல்சின் சாண்டா கிளரிட்டாவில் துவங்கிய காட்டுத்தீ, முற்பகலுக்குள் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் வெண்டுரா (Ventura) மாகாணங்களில் உள்ள சுமார் 5000 ஏக்கர்களுக்கு பரவியது. கடந்த 7 ஆம் தேதி ஈட்டன்(Eaton) மற்றும் பாலிசேட்சில் (Palisades) உருவாகிய காட்டுத்தீயை காட்டிலும் இது மிகப்பெரிய காட்டுத்தீயாக.பரவி வருகிறது.
- தெற்கு கலிபோர்னியாவில் ஏற்கனவே சிவப்பு எச்சரிக்கை உள்ள நிலையில், சாண்டா அனா காற்று( (Santa Ana Wind) அதிகமாக வீசுவதால், காஸ்டேயிக் (Castaic) ஏரியை ஒட்டியுள்ள சுமார் 10,176 ஏக்கருக்கு மென்மேலும் தீ பரவியுள்ளது. தீயை கட்டுக்குள் கொண்டு வர கடுமையாக போராடி வரும் மீட்பு படையினர், நேற்று இரவு 10 மணிக்குள் 14% தீயை கட்டுப்படுத்தியுள்ளனர்.
- சான் கேப்ரியல் (San Gabriel) மலையில் காட்டுத்தீ மூண்டதால் மேற்கேயுள்ள பாதைகளை அதிகாரிகள் மூடியுள்ளனர். மேலும் புகையின் காரணமாக காற்று மாசு எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
“இதுவரை 31,000 பேரை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றியுள்ளனர். மேலும் 23,000 பேருக்கு பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் காவல்துறை தலைமை அதிகாரி ராபர்ட் லூனா கூறியுள்ளார்.
‘தற்போது உள்ள பதற்றமான சூழலில், காட்டுத்தீயை கட்டுப்படுத்துவது சவாலாக இருந்தாலும் அதை திறம்பட செய்து வருகிறோம்!’ என்று தீயணைப்புத்துறை தலைமை அதிகாரி மரோன்(Marrone) ஊடகங்களிடம் தெரிவித்தார்.
வியாழக்கிழமை வரை வறண்ட வானிலையே தொடரும் என்று லாஸ் ஏஞ்சல்சின் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- சுமார் 48 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் மிதமான காற்றும், மணிக்கு 112 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்றும் வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால், வியாழன் இரவு அன்று மிகவும் ஆபத்தான நிலை நிலவும் என்று தேசிய வானிலை சேவை மையத்தின் புயல் கணிப்பு மையம் அறிவித்துள்ளது.
லாஸ் ஏஞ்சல்சின் பாலிசேட்ஸ் (Palisades) மற்றும் ஈட்டன் (Eaton) பகுதியில் பரவியுள்ள அதி பயங்கர காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வருவதில் தீயணைப்பு வீரர்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
- 23,448 ஏக்கரை சுற்றி எரியும் பாலிசேட் தீயை 70% கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
- இதுவரை 14,021 ஏக்கரை நாசமாக்கியுள்ள ஈட்டன் காட்டுத்தீ, 95% கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
காரணம் என்ன?
ஆசியாவின் சைபீரியா பகுதிகளில் உருவாகும் குளிர்ந்த காற்று வட துருவத்திலிருந்து கனடா மற்றும் அமெரிக்காவிற்குள் நகர்கிறது. இதை ஆர்டிக் ப்ளாஸ்ட்(Artic Blast) என்று கூறுவர். இவ்விளைவினால் ஏற்படும் வறண்ட காற்று தெற்கு கலிபோர்னியாவில் வீசுவதால், இதுபோன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் நடக்க ஒரு காரணமாக அமைகிறது.
- திடீரென்று குளிர்ந்த மற்றும் வறண்ட வானிலைக்கு அடிக்கடி மாறும் தன்மையை ‘Hydroclimate whiplash’ என்று அழைக்கப்படுகிறது. மனிதர்களால் உருவாக்கப்பட்ட காலநிலை மாற்றத்தினால் தெற்கு கலிபோர்னியா பகுதியில் இந்த விளைவு மேலும் மோசமடைந்துள்ளது.
- அமெரிக்காவின் வறட்சி கண்காணிப்பின் படி, தெற்கு கலிபோர்னியாவின் பல பகுதிகள் வறட்சி மற்றும் குளிரினால் மீண்டும் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 8 மாதங்களில் லாஸ் ஏஞ்சல்சில் 0.16 இன்ச் மழை மட்டுமே பதிவாகியுள்ளது. பல இடங்கள் ஏற்கனவே மிதமான வறட்சியில் உள்ளன.
மேலும், குளிர் காற்று மண்டலம் இப்பகுதியை கடக்கவிருப்பதால், வரும் வெள்ளிக்கிழமை முதல் குளிர்ந்த வானிலை நிலவும் என்று லாஸ் ஏஞ்சல்சின் தேசிய வானிலை சேவை மையம் தெரிவித்துள்ளது.