Thursday, December 11, 2025

கத்தோலிக்க தலைவர் போப் பிரான்சிஸ் காலமானார்!

by Special Correspondent
0 comments

ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் தனது 88 ஆவது வயதில் உடல்நல குறைவால் நேற்று வாடிகனில் காலமானார். 

கடந்த பிப்ரவரி மாதம் சுவாசக் கோளாறால் அவதிப்பட்டு வந்த போப் ஆண்டவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைக்குப் பின் மார்ச் மாத இறுதியில் அவர் வாடிகனுக்கு திரும்பினார்.

அண்மையில், ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு வாடிகனில் குடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களை சந்தித்து உரையாற்றினார். குறிப்பாக காசாவில் நடக்கும் போர் நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்நிலையில் திங்கட்கிழமை காலை 7.35 மணியளவில் போப் பிரான்சிஸ் காலமானதாக தொலைக்காட்சி மூலம் கார்டினல் கெவின் ஃபெரல் (Cardinal Kevin Farrell) அறிவித்தார்.

போப் பிரான்சிஸ் கடந்து வந்த பாதை 

கடந்த 2013 ஆம் ஆண்டு போப் பெனடிக் XVI (Pope Benedict XVI) பதவி விலகிய பின் வாடிகனின் புதிய போப்பாக கார்டினல் ஜோர்ஜ் மரியோ பர்கோலியோ (Jorge Mario Bergoglio) எனும் இயற்பெயரைக் கொண்ட போப் பிரான்சிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டு  கடந்த 12 ஆண்டுகளாக இப்பதவியை வகித்து வந்தார். அவரது இறப்புக்கு உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

‘உலகளாவிய தெற்கு நாடுகள்’ (Global south) என்று அழைக்கப்படும் வளர்ந்து வரும் நாடுகளிலிருந்து வந்த முதல் போப் இவரேயாவார். திருச்சபையில் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் நிகழ்வது தொடர்பான உலகளாவிய கண்காணிப்பின் கீழ் இருந்த நிலையில், புதிதாக பதவியேற்ற போப் தனது துணிச்சலான தலைமையாலும், பணிவாலும் எல்லோருக்குமான இடமாக திருச்சபையை மாற்ற விழைந்தார். 

அனைவருக்குமான சமூக நீதி, புலம்பெயர் மக்களுக்கான உரிமைகள், சூழலியல் நீதி முதலியவற்றிற்கு போப் ஆண்டவர் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். காலநிலை மாற்றம் குறித்து பெரும் கவலை கொண்டு ‘Laudato si’ என்ற வெளியீட்டின் மூலம் நம் பூமி சந்திக்கும் சவால்கள் குறித்து விரிவாக எழுதியுள்ளார்.

திருச்சபையில் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான விவகாரத்தை மிகுந்த பொறுப்புடன் அணுகினார். மேலும் திருச்சபையை பாதுகாப்பான இடமாக மாற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். நவீன உலகத்தோடு திருச்சபையை இணைக்க தொடர்ந்து முயற்சித்தார். அவர் போப்பாக பதவி வகித்த காலத்தில் எடுத்த முக்கிய முடிவுகளில் தற்பாலின ஈர்ப்பு தம்பதிகளுக்கு ஆசீர்வாதங்களை வழங்க பாதிரியார்களை அனுமதித்தது, முதல் முறையாக வாடிகன் அலுவலகங்களின் தலைவர்களாக பெண்களை நியமித்தது போன்றவையும் அடங்கும். 

புதிய போப் தேர்வு 

போப்பின் இறுதி சடங்குகளுக்கு பின் கார்டினல்கள்* மாநாடு நடைபெறும். புதிய போப்பை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள் இங்கே நடைபெறும். பொதுவாக போப் இறந்து 15 முதல் 20 நாட்களுக்கு பிறகு இந்த மாநாடு நடைபெறுவது வழக்கம்.  

இதற்கிடையில் வாடிகனின் அன்றாட நடைமுறைகளை, போப் ஆண்டவரின் கருவூல அதிகாரி, மூத்த கார்டினல் கெவின் ஃபெரல் (Kevin Farrell) கவனித்துக்கொள்வார்.

* கார்டினல் என்பது ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் ஒரு உயரிய பதவியாகும்.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech