பயன்பாட்டில் இல்லாத சுரங்கங்கள் சூழலிய சுற்றுலாத் தளங்களாகவும் (Eco-tourism spots) வேளாண் காடு வளர்ப்பு (agroforestry) தளங்களாகவும் மாற்றி அமைக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி நிதித்துறை மற்றும் சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக சட்டசபையில் பேசியதாவது:
‘தமிழ்நாடு அரசு, கைவிடப்பட்ட சுரங்கங்களை குறிப்பாக கோவை மதுக்கரையில் உள்ள சுரங்கங்களை பல்லுயிர் பெருக்க இடங்களாக (biodiversity spots) மாற்ற திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்துக்காக சுமார் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பல்லுயிர் பெருக்கத்தை அதிகரிப்பதும், நிலத்தடி நீரின் அளவை அதிகரித்து இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபடுவதை கட்டுப்படுத்துவதும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். இதனால் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரமும் மேம்படும்.
ராஜபாளையத்தில் கார்பன் சமநிலை இலக்கை (carbon-neutrality target) அடைவதன் ஒரு பகுதியாக அங்குள்ள சஞ்சீவி மலையை மீட்டு, அந்நிய செடி வகைகளை களைந்து, உள்ளூர் நாட்டு மரங்கள் நடப்படும். அதேபோல் ராஜபாளையத்தில் காலநிலை தாங்கும் திறனை அதிகரிக்கும் விதமாக அந்நகரில் உள்ள சுமார் 6 நீர் நிலைகளும், அந்த நீர்நிலைகளை இணைக்கும் 20 ஓடைகளும் ரூ.16 கோடி செலவில் சீரமைக்கப்படும்.
மேலும், தமிழ்நாட்டில் காலநிலை கல்வியறிவை வளர்த்தெடுக்கும் திட்டத்திற்காக ரூ. 24 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் பள்ளிகளில் உள்ள சுற்றுச்சூழல் குழுக்களை ஆதரிக்கும் விதமாக பல போட்டிகள் நடத்தப்படும்.
அதேபோல் ஆறுகள் மூலம் நெகிழி (பிளாஸ்டிக்) கழிவுகள் கடலில் கலப்பதை தடுக்கும் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும். சுற்றுச்சூழலை பாதிக்காமல் கடல்சார் வளங்கள் மற்றும் நீல பொருளாதாரம் என்னும் கடல் சார் பொருளாதாரத்தின் (Blue economy) பயன்களை பெறும் TN-SHORE (Tamil Nadu Sustainably Harnessing Ocean Resources and Blue Economy) முன்னெடுப்பின் ஒரு பகுதியாக உலக வங்கி அளித்த நிதியைக் கொண்டு சென்னையில் உள்ள ஆற்றில் சோதனை திட்டமாக (Pilot Project) ரூ. 4 கோடி செலவில் கழிவுகளை இடைநிறுத்தும் கருவிகள் (interceptors) பொருத்தப்படும். மேலும், 14 கடலோர மாவட்டங்களிலும் ரூ. 1.75 கோடி செலவில் பயன்படுத்தப்பட்ட மீன்பிடி வலைகளை சேகரிக்கும் மையங்கள் நிறுவப்படும்.
வாகனங்கள் வெளியிடும் புகையை கண்காணிக்கும் திட்டத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு ஆணையம் நடைமுறைப்படுத்தும். முதற்கட்டமாக, இந்த திட்டம் சோதனை அடிப்படையில் சில சுங்கச்சாவடிகளில் அமல்படுத்தப்படும்’.
இவ்வாறு தனது அறிவிப்பில் கூறியிருந்தார்.