ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரிலுள்ள ஷாஹித் ராஜாயி (Shahid Rajaee) துறைமுகத்தில் நிகழ்ந்த பயங்கர வெடிவிபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ஈரான் நாட்டிலுள்ள ஹொர்மோஸ்க்கான் மாநில தலைநகரான பந்தர் அப்பாஸுக்கு மேற்கில் 23 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இந்த துறைமுகம் ஈரானின் அதிநவீனமான கண்டைனர் துறைமுகமாக அறியப்படுகிறது. உலகின் மொத்த எண்ணெய் உற்பத்தியில் ஐந்தில் ஒரு பங்கு இந்த துறைமுகம் வழியாக போக்குவரத்து செய்யப்படுகிறது.
துறைமுகத்தில் இருந்த பல கண்டைனர்கள் வெடித்து சிதறியதால் இந்த பயங்கர வெடிவிபத்து நடந்திருக்கிறது என்று அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
தற்போது தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தீ விபத்து குறித்து தகவலறிந்ததும், உடனடியாக சம்பவ இடத்துக்கு மீட்பு படையினர் அனுப்பப்பட்டுள்ளனர் என்று ஹோர்மோஸ்க்கன் ரெட் கிரெசென்ட் என்னும் தொண்டு நிறுவனத்தின் (Hormozgan Red Crescent Society) தலைவர் முக்தர் சலஹஷ்யர் (Mokhtar Salahshour) ஈரானிய தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
தீயில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கண்டெய்னர்கள் வெடித்ததில் உண்டான பயங்கர சத்தம் பல நூறு கிலோ மீட்டர்களுக்கு அப்பால் கேட்டதாக அங்கிருந்த குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தெரிவித்தனர்.
சற்று நேரத்தில் தீ மளமளவென பரவி பயங்கர வெடிப்பை உண்டாக்கியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் உள்ளூர் ஊடகங்களிடம் கூறினர்.
இந்த விபத்து சம்பவம் தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவி தற்போது பேசுபொருளாகியுள்ளது.