ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளியின் தாளாளர் கைது செய்யப்பட்டதோடு, கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சி 30வது வார்டு கவுன்சிலராக திமுக.வை சேர்ந்த பக்கிரிசாமி உள்ளார். இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் தாளாளராகவும் உள்ளார்.
இவர் அவருடைய பள்ளியில் படிக்கும் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
இதனையடுத்து பக்கிரிசாமியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
அதோடு அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்பிலிருந்தும் பக்கிரிசாமியை நிரந்தரமாக நீக்கம் செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
விருத்தாச்சலம் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்ததைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் அதற்கு பதிலளித்தார்.
விருத்தாசலத்தில் யுகேஜி படிக்கும் சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆட்படுத்திய திமுக கவுன்சிலர் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், ‘இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்களும் உரிய விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த அரசை பொறுத்தவரை செய்தி கேள்விப்படவில்லை, தொலைக்காட்சி மூலமாகத்தான் பார்த்தேன் என கூற தயாராக இல்லை. செய்தி அறிந்த உடனேயே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி உடனடியாக கைது செய்து அதற்கு பிறகு சொல்ல வேண்டும் என தகவல் அளித்திருந்தேன்.
அந்த அடிப்படையில் குற்ற செயலில் ஈடுபடுவோர் குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மனித குலத்திற்கு அவமான சின்னம் என கருதுகிறோம். அந்த வகையில் இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் எவராக இருந்தாலும் அவர்கள் மீது எந்த விதமான பாரபட்சமும் இன்றி கடுமையான நடவடிக்கைகள் துரிதமாக எடுப்போம்’ என்றார்.