அல்போர்வில்லில் தன்னுடைய மூன்று பெண் குழந்தைகளை கொன்றதாக கூறி குழந்தைகளின் தந்தை காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.
வால் த மார்ன் (Val-de-Marne) மாவட்டத்தில் உள்ள அல்போர்வில்லில் (Alfortville) தன்னுடைய மூன்று பெண் குழந்தைகளை கொன்றதாக குழந்தைகளின் தந்தை Dieppe (Seine-Maritime) காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இதனை அறிந்த காவல்துறையினர் உடனடியாக அவருடைய வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கு மூன்று பெண் குழந்தைகளின் உடல்கள் உயிரற்ற நிலையில் காணப்பட்டன.
இதனை அடுத்து அந்த உடல்களை கைப்பற்றி உடற்கூராய்விற்கு அனுப்பியுள்ளனர்.
‘உடல்கள் கைப்பற்றப்பட்ட இடத்தில் நடைபெற்ற முதற்கட்ட ஆய்வில், கொல்லப்பட்டவர்களின் உடல், ஆடைகள், மீதம் இருந்த உணவு ஆகிவிட்டது இக்கொலை சனிக்கிழமை இரவு நடந்திருக்கலாம். குறிப்பாக தூங்கும்போது அவர்கள் கொல்லப்பட்டு இருக்கலாம்’ என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து 41 வயது நபரான அந்த தந்தை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கொல்லப்பட்ட மூன்று குழந்தைகளுக்கும் முறையே 4, 10, 11 வயது இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
(கொல்லப்பட்ட குழந்தைகளின் நெஞ்சில் கத்திக்குத்து காயங்கள் தென்பட்டன. ஒரு குழந்தையின் கைகளில் காணப்பட்ட கத்திக்குத்தி காயம் அவர் மரணத்திற்கு முன் கொலையாளியுடன் போராடி இருக்கலாம் என்பதை உறுதிப்படுத்துகிறது. நான்கு வயது குழந்தையை அவசர மீட்பு பிரிவினர் முதலுதவி அளித்து மீட்க முயன்றனர். ஆனால் அது பலனளிக்கவில்லை’ என்று அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார்.
‘பாலுறவு தொடர்பான தடயங்கள் எதுவும் காணப்படவில்லை. உடற்கூராய்விற்கு பின்னரே பல்வேறு உண்மைகள் தெரிய வரும்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி பரிசோதனைகள் மூலம் கொல்லப்படுவதற்கு முன் குழந்தைகள் போதை மருந்து தாக்கத்திற்கு ஆளாக்கப்பட்டனவா என்பதும் தெரிய வரும்.
பிள்ளைகளின் பெற்றோர் கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருமணம் செய்துள்ளனர்.
அண்மையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்துள்ளனர். குழந்தைகளின் தந்தை அவ்வப்போது சென்று குழந்தைகளை சந்தித்து வந்துள்ளார்.
குழந்தைகளின் தந்தை ஏற்கனவே அவருடைய மனைவியை தாக்கியதாக குடும்ப வன்முறை வழக்கில் 2021 ஆம் ஆண்டில் 18 மாதம் சிறை தண்டனை பெற்றவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மோரோக்காவை சேர்ந்த அந்த நபர் ஏற்கனவே 2005 ஆம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டவர் என்றும், குடும்பத்தை மீள் சந்திக்கும் முறைப்பாட்டின் அடிப்படையில் பிரான்சுக்கு திரும்ப வந்துள்ளார் என்றும் காவல்துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.