குடும்ப வன்முறைக்கு எதிராக போராட பொபிக்னி நீதித்துறையும் மருத்துவர்கள் கவுன்சிலும் இணைந்த புதிய நடைமுறைகளை செயல்படுத்தியுள்ளன.
பொபிக்னி நீதிமன்றம் குடும்ப வன்முறைக்கு எதிராக போராடுவதை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் முன்னிலைப்படுத்தி வந்தது. இதனைத் தொடர்ந்து குடும்ப வன்முறைக்கு எதிரான நடைமுறைகளை மருத்துவ கவுன்சிலுடன் இணைந்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
‘குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்டவர் உதவி தேவைப்படும் ஆபத்தான சூழலில் இருந்தாலோ, யாருடைய கட்டுப்பாட்டில் சிக்கி இருந்தாலோ, அவர் தன்னுடைய நோயாளியாக இருந்தாலும் மருத்துவர் தன்னுடைய இரகசிய காப்பினை மீறி காவல்துறைக்கு தகவல் அளிக்கலாம்’ என நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நடைமுறையின்படி ஒரு மருத்துவர் நோயாளிகளை பற்றிய மருத்துவ தகவல்களின் ரகசிய காப்பினை மீற வேண்டியிருந்தாலும் அது மருத்துவர்களுக்குப் பாதுகாப்பாகவே இருக்கும்.
முறையான விசாரணையின் அடிப்படையில், குடும்ப வன்முறை வழக்குகளைக் விரைந்து கண்டறிவதற்கு இந்த நடைமுறை பயனளிக்கும்.
இந்த புதிய நடைமுறை பொபிக்னி நீதித்துறை மருத்துவர்களின் அறிக்கைகளைக் கையாளுவதை விரைவுபடுத்தும் என நம்பப்படுகிறது.
உள்துறை அமைச்சகத்தின் 2022 திசம்பர் அறிக்கையின்படி, பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகம் நிகழும் மாவட்டமாக Seine-Saint-Denis உள்ளது குறிப்பிடத்தக்கது.