கடந்த வாரம் குப்பைத்தொட்டியில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பச்சிளங் குழந்தையின் தாய் என சந்தேகிக்கப்படும் 18 வயது இளம் பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். கடும் உடல்நலக் குறைவால் அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குப்பைத் தொட்டியில் குழந்தையை வீசியதாக 18 வயது இளம் பெண்ணை Pierrefitte-sur-Seine-யில் ( Seine-Saint-Denis ) காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குப்பைத் தொட்டி அருகே இறந்து கிடந்த பச்சிளம் குழந்தையின் தாய் இவர் என்று நம்பப்படுகிறது.
குப்பைத் தொட்டியில் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்ட சில மணி நேரங்களில் அதே தெருவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வீட்டிலிருந்து அவசர மருத்துவ சேவையினரை அழைத்துளனர்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள பெண்ணின் உறவினர்களே அப்பெண்ணுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறி அவர்களை அழைத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த அவசர மருத்துவ பிரிவினர் குழந்தையின் தாய் எனக் கூறப்படும் பெண்ணை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர்.
தற்போது வரை அவர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார் என்றும், அவர் பேசும் நிலையில் இல்லை என்றும், அவருக்கு நினைவு திரும்பினால் மட்டுமே மேற்கொண்டு விவரங்கள் தெரிய வரும் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குழந்தை எப்படி இறந்தது என்பதும், உடற்கூராய்வு அறிக்கையும் இன்னமும் தெரிவிக்கப்படவில்லை.