உடல் மற்றும் பாலியல் சார்ந்த குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களின் அளவு 2021 ஆம் ஆண்டில் 16 சதவீதம் உயர்ந்துள்ளதாக பிரான்சின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கணவர் அல்லது முன்னாள் கணவர் அல்லாமல் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களால் நிகழ்த்தப்படும் குடும்ப வன்முறையின் அளவு 2020 ஆம் ஆண்டைக் காட்டிலும் 2021 ஆம் ஆண்டு உயர்ந்துள்ளது.
மொத்தமாக, 64 ஆயிரத்து 300 பேர் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 47 ஆயிரத்து 900 பேர் உடல் ரீதியான வன்முறையினாலும், 16,400 பேர் பாலியல் ரீதியான வன்முறையினாலும் பாதிக்கப்பட்டவர்கள் என புள்ளி விவரம் கூறுகிறது. இதன்படி பாலியல் வன்முறையினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 சதவீதமும் உடல் ரீதியான தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 சதவீதமும் உயர்ந்துள்ளது.
அனைத்து விதமான வன்முறைகளினாலும் பாதிக்கப்பட்டவர்களில் சிறார்கள் எண்ணிக்கையும் அதிகமாகும். பாதிக்கப்படும் ஐவரில் நான்கு பேர் சிறார்கள்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் 76% ஆண்கள் குறிப்பாக பாலியல் தொடர்பான வன்முறைகளில் 94 சதவீதம் ஆண்களே கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் இழைத்தவர்களில் இதுவரை 50,000 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறிப்பாக திருமணம் ஆகாத சூழலில் இருப்பவர்கள் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்படுவதை பதிவு செய்ததில்லை என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.