பள்ளிக்கு ‘அபயா’ மேலாடை அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து பல மாணவிகள் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
புதிய கல்வியாண்டிலிருந்து பள்ளி மாணவிகள் இஸ்லாமிய பெண்களின் மேலாடையான ‘அபயா’ அணிந்து பள்ளிக்கு வருவதற்கு கடந்த மாதம் பிரெஞ்சு அரசு தடை விதித்திருந்தது.
விடுமுறைகள் முடிந்து, புதிய கல்வியாண்டில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், தடையை மீறி கிட்டத்தட்ட 300 மாணவிகள் பள்ளிக்கு அபயா அணிந்து வந்ததாகவும், அவர்களில் 67 பேர் அபாயாவை மாற்ற எதிர்ப்பு தெரிவித்ததால் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் கல்வி அமைச்சர் காப்ரியேல் அத்தல் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான மாணவிகள் ஆட்டையை மாற்றிக்கொண்டு வகுப்புகளுக்கு சென்றனர்.
Rentrée scolaire: Gabriel Attal (@GabrielAttal) annonce que "298 filles se sont présentées à l'école avec une abaya" et 67 ont refusé de l'enlever pic.twitter.com/VVfBDG6rhS
— BFMTV (@BFMTV) September 5, 2023
ஆடையை மாற்ற விரும்பாத மாணவிகளிடம் ‘சமய சார்பின்மை’ குறித்து அமைச்சர் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை அளித்த பள்ளிகள், அவர்களை திருப்பி அனுப்பியுள்ளன.
அக்கடிதத்தில் ‘சமய சார்பின்மை ஒரு தடையல்ல, அதுவொரு சுதந்திரம். பிரெஞ்சு குடியரசின் பள்ளி பாகுபாடு இல்லாத அனைத்து மாணவர்களையும் வரவேற்கிறது. மாணவர்களுக்கு உடல், மன, அடையாள அழுத்தங்கள் ஏற்படாமல் அவர்களை பாதுகாக்க விரும்புகிறோம்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
‘வரும் நாட்களில் அவர்கள் பள்ளி சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு நடக்கின்றனரா என்று பார்க்கலாம்’ என்று கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.
பிரான்சில் 1968-ஆம் ஆண்டிலிருந்து பள்ளிகளில் சீருடைகள் அணிவது கட்டாயமாக்கப்படவில்லை.
சீருடைகளை ஏற்றுக்கொள்ளும் பள்ளிகளில் மட்டும் சோதனை ஓட்டமாக சீருடை அணிவதற்கான அட்டவணை இந்த ஆண்டில் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.