பிரான்சின் கூர்பெவொவில் (Courbevoie) டிராம் பாதையில் இருந்த மின் கம்பத்தின் மீது RATP பேருந்து வேகமாக மோதியதில் பேருந்து கடும் சேதமடைந்தது.
கூர்பெவொவில் மாலை எட்டு மணியளவில் பேருந்து பணிமனைக்கு திரும்பிக்கொண்டிருந்த 144-ஆம் எண் RATP பேருந்து T2 டிராம் தடத்தில் இருந்த மின் கம்பத்தின் மீது கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் பேருந்து கடும் சேதமடைந்தது. மின் கம்பமும் பாதிப்படைந்தது.
பேருந்து பணிமனைக்கு திரும்பிக்கொண்டிருந்ததால் விபத்து நடந்தபோது நல்வாய்ப்பாக பேருந்தில் பயணிகள் யாரும் இருக்கவில்லை.
மின் கம்பத்தில் பேருந்து மோதியதில் பேருந்து ஓட்டுநர் காயமடைந்தார். உடனடியாக விபத்து நடந்த இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், பேருந்தின் ஓட்டுநருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அவர் நலமுடன் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
விபத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக T2 தடத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் டிராம் போக்குவரத்தில் கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டது.
இரவு பதினொரு மணியளவில் மீண்டும் அந்த வழித்தடத்தில் டிராம் சேவை துவக்கப்பட்டது.