இங்கிலாந்திற்குள் நுழைவதற்காக கன்டெய்னரில் பதுங்கி பயணித்த 39 பேர் மூச்சுத்திணறி பலியான சம்பவத்தில் நால்வருக்கு கடும் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22-ஆம் தேதி இங்கிலாந்திற்குள் சட்டவிரோதமாக நுழையும் பொருட்டு வியட்நாமை சேர்ந்த 31 ஆண்கள், 8 பெண்கள் என 39 பேர் பிரான்சின் வடக்கு பகுதியிலிருந்து ஒரு கன்டெய்னர் லாரியில் ஏறி இரகசியமாக கிளம்பினர்.
ஒரு நாள் முழுக்க பயணித்து இரவு கிழக்கு இலண்டன் பகுதியிலுள்ள தொழிற்சாலை பகுதிக்கு அந்த கன்டெய்னர் லாரி சென்றடைந்தது.
அங்கு கன்டெய்னரை திறந்து பார்த்தபோது, கன்டெய்னருக்குள் இருந்த 39 பேரும் மூச்சுத்திணறியும், மிகை வெப்பத்தாலும் உயிரிழந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக நான்கு பேர் மீது இங்கிலாந்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுத்தொடர்பாக 19 பேர் பாரிசில் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டனர்.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு பத்தாண்டுகள் சிறைத்தண்டனையும், அபராதமும், நிரந்தர தடையும் விதிக்கும்படி அரசு வழக்குரைஞர்கள் வாதாடி வருகின்றனர்.
’39 பேரின் மரணத்திற்கு இந்த நால்வரும் மறைமுக காரணமாக இருந்துள்ளனர். பணத்திற்கு ஆசைப்பட்டு இப்படியான செயல்களில் ஈடுபடுகின்றனர்’ என்று வழக்குரைஞர் சாரா காலா குறிப்பிட்டுள்ளார்.
இறுதிக்கட்ட வழக்கு விசாரணை வருகின்ற வெள்ளிக்கிழமை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.