ஐநா சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆதரவு தெரிவித்துள்ளன. தற்போது பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக உள்ள 5 நாடுகளில் 4 நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவளித்துள்ளன. ஆனால் சீனா மட்டும் இந்தியாவுக்கு ஆதரவளிக்கவில்லை. இந்நிலையில், மீண்டும் இந்தியா சார்பில் நிரந்தர உறுப்பினராவதற்கு போட்டியிட வேண்டும் என்று பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் வலியுறுத்தியுள்ளது. அடுத்த மாதத்துடன் கவுன்சிலின் தற்காலிக உறுப்பினர் பதவியும் முடிவடைகிறது.
நிரந்தர உறுப்பினர்கள்
ஐநா சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் ஆக வேண்டும் என்பது இந்தியாவின் நீண்ட நாள் கனவு. ஆனால் ஒவ்வொரு முறையும் இதனை சீனா புறக்கணித்து வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் சீராய்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் புதியதாக உலக நாடுகளை கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராக்க வேண்டும் என பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது. முதற்கட்டமாக இந்தியா, ஜெர்மனி, பிரேசில் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை நிரந்தர உறுப்பினர்களாக ஆக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
பிரான்ஸ்
இது குறித்து ஐ.நாவுக்கான பிரான்சின் நிரந்தர துணை பிரதிநிதி நதாலி பிராட்ஹர்ஸ்ட் பேசுகையில், “சக்தி வாய்ந்த இந்த ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் புதிய நாடுகள் இணைய உள்ளதன் அவசியத்தை பிரான்ஸ் வலியுறுத்துகிறது. சர்வதேச அளவில் நிலவி வரும் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு எதிராகவும் அமைதிக்காகவும் புதிய நாடுகள் கவுன்சிலில் இணைவது அவசியம். இது குறித்து பிரான்சிஸின் நிலைப்பாடு அனைவருக்கும் தெரியும். எனினும் மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்துகிறோம். அதாவது, இந்தியா, ஜெர்மனி, பிரேசில் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை நிரந்தர உறுப்பினர்களாக ஆக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு.
அதிகாரம்
கவுன்சிலில் அதிக பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறோம். அதுதான் கவுன்சிலின் அதிகாரத்தையும், பிரதிநிதித்துவத்தையும் அதிகரிக்கும். இதன் மூலம் கவுன்சிலில் சமமான பிரதிநிதித்துவம் பெறும். அந்த வகையில் நிரந்தர உறுப்பினர்களாக மாற முயலும் புதிய சக்திகளை நாம் கணக்கில் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் 25 உறுப்பினர்களாவது புதியதாக இணைக்கப்பட வேண்டும். வீட்டோ அதிகாரத்தை பொறுத்த அளவில், அது இரண்டு விஷயங்களை கணக்கில் கொண்டு பயன்படுத்தப்பட வேண்டும்.
பிரிட்டன்
ஒன்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் சட்டபூர்வமான தன்மையை ஒருங்கிணைக்க, இரண்டாவது சர்வதேச அமைதியை உறுதிப்படுத்த. இதனை கருத்தில் கொண்டுதான் கவுன்சிலின் ஐந்து உறுப்பினர்களும் கூட்டாக சேர்ந்து வீட்டோ அதிகாரத்தை விட்டுக்கொடுக்க தயாராக இருக்க வேண்டும் என்று பிரான்ஸ் வலியுறுத்தியிருந்தது” என்று கூறினார். முன்னதாக பிரிட்டனும் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு ஆதரவளிப்பதாக கூறியிருந்தது. இது குறித்து பேசிய ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கான பிரிட்டனின் நிரந்தர பிரதிநிதி பார்பரா உட்வார்ட், “இந்தியா, ஜெர்மனி, பிரேசில் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினராவதற்கு பிரிட்டன் முழு ஆதரவையும் அளிக்கிறது. கவுன்சிலில் ஆப்ரிக்கா பிரதிநிதித்துவம் பெற வேண்டும்” என்று கூறியுள்ளார்.
நெருக்கடி
தற்போது 5 நிரந்தர உறுப்பினர்களுடன் 10 தற்காலிக உறுப்பினர்களையும் ஐநா கொண்டிருக்கிறது. இவ்வாறு இருக்கையில், இந்த தற்காலிக பதவியும் அடுத்த மாதம் முடிவுக்கு வருகிறது. இப்படி இருக்கையில் இந்தியா பாதுகாப்பு கவுன்சிலில் கட்டாயம் உறுப்பினராகிவிட வேண்டும் என்கிற நெருக்கடியில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்: TAMIL.ONEINDIA.COM