சென்னையிலிருந்து புதுவைக்கு 10 பேருடன் பயணித்த டெம்போ டிராவலர் வேன் கிளியனூர் அருகே சாலையோர தடுப்பில் மோதி கோர விபத்தில் சிக்கியது. இதில் ஒரு குழந்தை உட்பட இருவர் பலியாயினர். மற்றவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி, சாரம் பகுதியை சேர்ந்தவர் புதுச்சேரி, சாரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சங்கர். இவருடைய உறவினர் சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தார் தமிழரசி, வினோதினி, விக்னேஸ்வரன் அலியோன், விலானி உட்பட ஆறு பேர் பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகின்றனர்.
விடுமுறைக்காக தாய்நாடு வரும் அவர்களை அழைத்து வருவதற்காக, சங்கர், சுஜாதா, சுகந்தன் ஆகிய மூன்று பேர் புதுச்சேரியை சேர்ந்த துரை என்ற ஓட்டுநருடன் டெம்போ டிராவலரில் நேற்று சென்னை விமான நிலையம் சென்றுள்ளனர். பிரான்சிலிருந்து வந்த உறவினர்களை அழைத்துக்கொண்டு சென்னையிலிருந்து அவர்களது சொந்த ஊரான புதுச்சேரிக்கு டெம்போ வேனில் சென்றுள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலை விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே கேனிப்பட்டு எனுமிடத்தில் வேன் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சரமாரியாக ஓடி நெடுஞ்சாலையின் இடப்புறமாக இருந்த தகர தடுப்பில் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
அந்த விபத்தில் சாலையோர தகர தடுப்பு டெம்போ வேனின் நடுவே கிழித்துக்கொண்டு பின்பக்கத்தை தாண்டி 70 அடிக்கும் மேல் சென்றுள்ளது. அந்த விபத்தில் வேனில் பயணித்த ஓட்டுனர் உட்பட பத்து பேரும் பலத்த காயமடைந்தனர். மேலும் வாகனத்தின் குறுக்கே உள்பக்கமாக சாலையோர தகர தடுப்பு சொருகி பாய்ந்ததால் சிலர் உள்ளேயே இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
இந்த விபத்தை கண்ட அப்பகுதியாக சென்ற பொதுமக்கள் காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் இந்த விபத்தில் சுரேஷ் என்பவரும், ஒன்றரை வயது குழந்தையும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து கிளியனூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அப்பகுதியை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிலர் மேல் சிகிச்சைக்காக POSH மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஒன்றரை வயது பெண் குழந்தை அபாயகரமான நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும், ஒரு பெண்மணிக்கு கால் பறிபோகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர்களுக்கு உடனடியாக A1B Negative, AB Negative வகை இரத்தம் தேவைப்படுகிறது. தொடர்புக்கு +91 8637494369.
வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பியவர்களுக்கு நேர்ந்த விபத்தில் குழந்தை உட்பட இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியிலும் பிரான்ஸ் வாழ் புதுவை தமிழர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.