புதுச்சேரியும், பிரெஞ்சு இந்திய தமிழர் பாரம்பரியமும்

by Editor
0 comment

புதுச்சேரியில் பூர்வீக குடி மக்கள் தமிழோடு பிரெஞ்சு கலந்து பேசுவதை காண முடியும். “வணக்கங்க சார்” என்பதை “போன்சுவர் மிசியே” என்று விளித்து பேசுவர்.புதுச்சேரி (பாண்டிச்சேரி) யூனியன் பிரதேசத்தின் பிரெஞ்சு இந்திய தமிழர் கூட்டு கலாசாரமும் பல நூற்றாண்டுகள் கண்ட பாரம்பரிய பிரெஞ்சு மற்றும் தமிழ்க்கட்டிடக் கலையின் கலவையும், மேலை நாட்டு மற்றும் தமிழர் சமையலில் கடல் மீன் உணவு வகைகளும், அற்புதமான நேர்கோடுகளான வீதி அமைப்பும் சர்வதேச, அனைத்து இந்திய மாநிலங்களின், அண்டை மாநிலங்களின் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் சொர்க்கமாக திகழ்ந்து வருகிறது.

புதுச்சேரி மாநிலம், தமிழகம், கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் நான்கு பகுதிகளாக ஆங்காங்கே சிறு சிறு நிலப்பரப்பாக இருந்து வருகிறது.மாநில தலைநகர் புதுச்சேரி, தமிழகத்தின் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கு இடையிலும், மாகி பகுதி, கேரளா மாநிலம் கோழிக்கோடு, கண்ணனூர் மாவட்டங்களுக்கு இடையிலும், ஏனாம் பகுதி ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகிலும் அமைந்துள்ளன. நான்கு பகுதிகளும் கடற்கரையோர மாவட்டங்களாக திகழ்கின்றன.இந்தியாவின் கோவா மற்றும் புதுச்சேரி பிரதேசங்கள் தவிர பிற பகுதிகள் ஆங்கிலேய காலனி ஆதிக்கத்திலிருந்து 1947-ல் விடுதலை அடைந்த போதிலும் புதுச்சேரி பிரதேசம் 1954-ல் தான் பிரெஞ்சு ஆட்சியிலிருந்து விடுதலை பெற்று இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.அப்போது மேற்குவங்க மாநிலத்தில் பிரெஞ்சு காலனி பிரதேசமாக இருந்த சந்திரநாகூர் அப்பகுதி மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில் 1954-ம் ஆண்டில் மேற்குவங்காளத்துடன் இணைக்கப்பட்டது.

புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகள் இந்தியாவின் ஒரு பகுதியாக 1954-ல் இணைக்கப்பட்டு, 1963-ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி “பாண்டிச்சேரி யூனியன் பிரதேசமாக” அறிவிக்கப்பட்டது.சுதந்திரத்திற்கு பின்னர் புதுச்சேரி வருகை தந்த பிரதமர் நேரு, புதுச்சேரி, பிரெஞ்சு இந்தியா கலாசார ஜன்னலாக விளங்குகிறது என்று குறிப்பிட்டார். அதேபோல் புதுச்சேரியின் கடற்கரை, ஆசிய நாடுகளின் அழகிய கடற்கரைகளுள் ஒன்று என்றும் குறிப்பிட்டார்.இன்றும் புதுச்சேரி, பிரெஞ்சு இந்திய தமிழர் கலப்பு கலாசாரத்தை ஓங்கி ஒலித்துக்கொண்டு, சர்வதேச, இந்திய சுற்றுலா பயணிகளை கவர்ந்து ஈர்க்கும் சொர்க்கமாக திகழ்ந்து வருகிறதுபுதுச்சேரியில் பூர்வீக குடி மக்கள் தமிழோடு பிரெஞ்சு கலந்து பேசுவதை காண முடியும்.

“வணக்கங்க சார்” என்பதை “போன்சுவர் மிசியே” என்று விளித்து பேசுவர். “ஆஸ்பிட்டல்” என்பதை “ஒப்பித்தால்” என்பர். சிரப் என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் மருந்து வகைகளை “பொசியம்” என்பர். மதுவகைகளையும் “பொசியம் போடலாமா” என்று சிலேடையாக குறிப்பிடுவார்கள்.பாரம்பரிய பிரெஞ்சு இந்திய தமிழர்கள், பிரெஞ்சு கலந்த தமிழில் தான் பெரும்பாலும் பேசுவார்கள். நண்பரை “என்ன கம்ராது” என்று அழைப்பர். கல்லூரி செல்கிறேன் என்பது “கொலேஷ் போறேன்” என்பார்கள். அலுவலகத்துக்கு போவதை “பீரோ போறேன்” என தெரிவிப்பர்.பொதுப்பணித்துறை அலுவலகத்தை “த்ராபாப்ளிக் பீரோ” என்பர். நண்பர்கள் சந்தித்து பிரியும் போது அப்புறம் பார்ப்போம் என்பதை “வியான் சீ” என்பர் “தேங்க்யூ” “நன்றி” என்பதற்கு பதிவாக “மெர்சி” என்று தான் கூறுவார்கள்.

புதுச்சேரிக்கு வரும் சுற்றலா பயணிகள் தமிழர்கள் புதிய கலப்பு மொழி பேசுவதை வியந்து பார்ப்பதுண்டு. இரட்டை குடியுரிமை கொண்ட புதுச்சேரி தமிழர்கள் இப்போதும் பணிக்காலத்தில் பிரான்சிலும், ஓய்வுகாலத்தில் பாண்டிச்சேரியிலும் வாழ்கின்றனர். ஆண்டுதோறும் ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் விடுமுறையில் பாண்டிச்சேரிக்கு வருகை தந்து உறவினர்களுடன் உறவாடுகின்றனர்.புதுச்சேரி நகர பகுதி, பிரான்சு நாட்டு வெள்ளைக்காரர்கள், சர்வதேச வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், பிரெஞ்சு குடியுரிமை தமிழர்கள், வடநாட்டு பயணிகள், தமிழக, கர்நாடக சுற்றுலா பயணிகளின் சங்கமமாக திகழ்கிறது. வங்க கடலோரத்தில் மீனவர் குடியிருப்பு பகுதியில் 17-ம் நூற்றாண்டில் பிரெஞ்சு வர்த்தகர் பிரான்சுவா மர்த்தேன் கப்பலில் வந்து இறங்கி வர்த்தகம் தொடங்கினார்.

பின்னர், பிரெஞ்சு அரசின் ஆளுநராக ஆளுமை செலுத்தியபொது, புதுச்சேரி (புதிய குடியிருப்பு பகுதி) என்று தமிழில் அழைக்கப்பட்டு பின்னர், “பொந்திச்சேரி” என்று பிரெஞ்சு மொழியிலும், “பாண்டிச்சேரி” என்றும் ஆங்கிலத்திலும் திரிபாகியது.பாண்டிச்சேரி என்று உலகம் புகழும் பெருமையும் சர்வதேச ஈர்ப்பும் கொண்டு விளங்கிய பகுதி சில ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரி அரசால் முன்மொழியப்பட்டு மத்திய அரசால் மீண்டும் “புதுச்சேரி” என்று பெயர் சூட்டப்பட்டது. வேதகாலங்களில் கல்வியின் கேந்திரமாக, விளங்கியதால் “வேதபுரம்” என்றும் அழைக்கப்பட்டுள்ளது. வேதங் களை தென்னாட்டுக்கு கொண்டுவந்து சேர்த்த அகத்தியர் தனது தெற்கு யாத்திரையின் போது இப்பகுதியில் ஆசிரமம் அமைத்து தங்கி இருந்ததாக ஒரு நம்பிக்கை பரவியுள்ளது.

இப்போது புதுச்சேரி நகருக்கு தெற்கே கடற்கரையில் உள்ள வீராம்பட்டினம் மீனவர் பகுதியில் சங்க கால புலவர்கள் வீரைவெளியனார், வீரைதித்தனர் ஆகியோர் வாழ்ந்ததாகவும், அகநானூறு, புறநானூறு கால வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வீராம்பட்டினம் பகுதியை ஒட்டிய ஆற்று முகத்துவாரம் அருகில் அமைந்துள்ள “அரிக்கன்மேடு” என்ற இடத்தில் இருந்த துறைமுகத்திலிருந்து திரைகடல் ஓடி திரவியம் தேடிய வரலாற்று சான்றுகள் கிடைத்துள்ளன. ரோமானியர்கள் வணிகம் செய்ததை அகழ்வாராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.கி.பி. 4 முதல் கி.பி. 14-ம் நூற்றாண்டு வரை பல்லவர், சோழர் மற்றும் பாண்டியர்கள் இப்பகுதியில் ஆட்சி செய்துள்ளனர்.சோழர் கால பண்டைய பழமை வாய்ந்த வில்லியனூர் திருக்காமீசுவர திருக்கோவில், உள்ளிட்ட ஈஸ்வரர், பெருமாள் ஆலயங்கள் இன்றும் மக்கள் வழிபாட்டுக்கு உகந்ததாக உள்ளன.சில திருத்தலங்கள் தொல்பொருள் துறையினர் பராமரிப்பில் பாதுகாக்கப்படுகின்றன.

பின்னர் விஜய நகர மன்னர்கள், இஸ்லாமியர்கள் ஆளுமையிலும் இப்பகுதி இருந்துள்ளது.1521-ல் முதன் முதலாக போர்த்துகீசியர்கள் வணிகம் செய்ய வந்துள்ளனர். புதுச்சேரியின் ஐரோப்பிய வரலாறு அப்போது தொடங்கியது. டச்சுக்காரர்கள், டேனிஷ்காரர்கள் வணிகத்திற்கு பிறகு 1674-ல் பிரெஞ்சு தளபதி பிரான்சுவா மார்த்தேன் இங்கு கப்பலில் வந்திறங்கிய இடம் இப்போது குருசுகுப்பம் என்று அழைக்கப்படும் புதுச்சேரி நகரின் அழகிய கடற்கரைக்கு வடக்கில் உள்ள மீனவ கிராமமாகும். அவர் அதை தமது குறிப்பில் எழுதும்போது புதுச்சேரி ஒரு சிறிய மீனவர் குடியிருப்பு பகுதி என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரெஞ்சுக்காரர்கள் அங்கு தங்களது கடியிருப்பை ஏற்படுத்திக்கொண்டு அவர்கள் வழிபாடு செய்ய “குரூஸ்” ஒன்றை கட்டியதால் பிற்காலத்தில் அப்பகுதி குருசுகுப்பம் என்று அழைக்கப்பட்டது.பின்னர் டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள் என்று மாற்றி மாற்றி 280 ஆண்டு காலம் ஆட்சி செய்துள்ளனர்.இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள், அரவிந்தர், பாரதியார் ஆகியோருக்கு அடைக்கலம் தந்ததாலும் பாரதிதாசன் பிறந்து வளர்ந்து வாழ்ந்த பூமி என்ற சிறப்பும் கொண்ட நகரில் அவர்கள் வாழ்ந்த இல்லங்களை காணவும், அரவிந்தர் அன்னை ஆசிரமத்தில் தியானம் செய்யவும் “ஆரோவில்” சர்வதேச நகரைக் காணவும் வடமாநில, வெளிநாட்டு பயணிகள் தினம் தினம் குவிகின்றனர்.- மா.இளங்கோ, முன்னாள் எம்.எல்.ஏ., தலைவர், புதுச்சேரி பிரெஞ்சு இந்தியர் உரிமைப் பேரவை.

தகவல் : DAILYTHANTHI.COM

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech