பிரெஞ்சு புரட்சியின் மறுபக்கம்

by Editor
0 comment

எந்த விஷயத்துக்கும் மறுபக்கம் உண்டு. பிரெஞ்சு புரட்சி 19ம் நூற்றாண்டு  வரலாற்றாசிரியர்களால் ரொமான்டிசைஸ் செய்யபட்டாலும் வரலாற்றில் அதன் தாக்கம் கேள்விக்குரியதே.

பதினாறாம் லூயி மன்னனாக பதவி ஏற்கையில் பிரெஞ்சு அரசாங்கம் நிதிநிலையில் தள்ளாடி கொண்டிருந்தது. இங்கிலாந்துடனான இடைவிடாத போர்கள் அதை பலவீனபடுத்தி இருந்தன. அந்த சூழலில் லூயி மன்னர் சில சீர்திருத்தங்களை செய்ய முனைந்தார். அரசின் செலவுகளை குறைக்க முனைந்தார். பணகாரர்களும் நில உடமையாளர்களும் ஏழைகளை விட குறைவாக வரி செலுத்தும் நிலை இருந்தது. அதை மாற்றி நிலத்தின் மேல் வரியை விதித்தார். பிரபுக்கள் அதை எதிர்க்கவும் நூறாண்டுகளாக கூட்டபடாமல் இருந்த பாராளுமன்றத்தை கூட்டினார். முதல் முறையாக தேர்தலும் நடத்தி பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுத்தார். பத்திரிக்கை தணிக்கை முறையையும் அகற்றினார்.

அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக இதன் விளைவுகள் எதிர்மறையாகின. தேர்ந்தெடுக்கபட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசருக்கு எதிராக திரும்பினார்கள். தணிக்கை செய்யபடாத பத்திரிக்கைகள் அரசை எதிர்த்து எழுத துவங்கின. அந்த சூழலில் தத்துவ ஞானி ரூசோவின் கொள்கைகளால் ஈர்க்கபட்ட பிரெஞ்சு மேல்தட்டு வர்க்கம் புரட்சி செய்ய துவங்கியது. ரூசோ ஒரு விந்தையான தத்துவஞானி. அவரது கருத்துப்படி மனிதனை நாகரிக சமுதாயம் கெடுத்து விட்டதாகவும் மனிதனின் இயற்கை குணாதிசயம் சிம்பன்சி, கிப்பன் குரங்கு மாதிரி சமூக தளைகளால் கட்டபடாத சூழலில் வெளிப்படும் குணாதிசயமே இயற்கை எனவும் நம்பி வந்தார். “முதல் முதலாக எந்த மனிதன் நிலத்துக்கு வேலி போட்டு நிலம் என்னுடையது என்றானோ, அன்றே நாகரிக சமூகம் பிறந்தது. இப்படி நாகரிக சமூகம் சமத்துவமற்ற நிலையில் பிறந்தது..” என்றார். சமத்துவத்தை கொண்டுவர வலுவான ஒரு அரசு வேண்டும்,. அதற்கு அளவற்ற அதிகாரம் வேண்டும். அதற்கு மக்கள் அனைவரும் கட்டுபடவேண்டும்.

இந்த சூழலில் ரூசோ எழுதிய நூல் ஒன்றில் “அரசி ஒருத்தி மக்கள் பசி எடுக்கிறது, ரொட்டி இல்லை என சொன்னதற்கு ‘ரொட்டி இல்லை என்றால் என்ன, அவர்கள் கேக் சாப்பிடட்டும்” என சொன்னாள் என எழுதினார். இது பழைய சீன கதை ஒன்றை தழுவி எழுதபட்ட புனைவு. “அரிசி இல்லை என்றால் மக்கள் மாமிசம் சாப்பிடட்டும்” என பழைய சீன மன்னன் சொன்னதாக இருந்த கதையை ஒரு இளவரசி சொன்னதாக மாற்றி எழுதினார் ரூசோ. அது எழுதப்பட்ட்ட ஆண்டு 1765. அன்று அரசி மேரி அண்டாய்னெட்டுக்கு வயது 9. அவர் அன்று பிரெஞ்சு அரசியே அல்ல. ஆனால் 1765ல் எழுதபட்ட இந்த நூல் ரூசோ இறந்து சுமார் 18 ஆண்டுகள் கழித்து 1782ல் வெளியிடபட்டது. ஆக மக்களை “ரொட்டி இல்லை என்றால் கேக் சாப்பிட சொல்லி” புரட்சியை உருவாக்கியதாக மேரி அண்டாய்னெட்டின் மேல் போடபடும் பழி முற்று, முழுக்க தவறானது. பிரெஞ்சு புரட்சி நடந்த காலகட்டத்தில் மேரி அன்டாய்னெட் இப்படி சொன்னதாக யாரும் சொல்லவில்லை. புரட்சி எல்லாம் முடிந்து “யார் அந்த ரூசோ சொன்ன அரசி” என யோசித்து மேரி அன்டாய்னெட் என முடிவெடுத்துவிட்டார்கள். புரட்சி நடந்த சமயத்தில் இது ஒரு விஷயமாகவே கருதபடவில்லை.

இந்த சூழலில் அமைச்சர் நெக்கர் என்பவர் வரவு செலவு கணக்கை தவறாக எழுதி ஒரு பட்ஜெட் சமர்ப்பித்தார். அவரை அதனால் லூடி மன்னர் பதவியில் இருந்து அகற்றினார். அந்த தவறான கணக்கு தான் உண்மை என்றும் இல்லாத நிதி நெருக்கடியை இருப்பதாக கூறுகிறார் மன்னர் எனவும் மக்கள் கொந்தளித்தார்கள். அந்த சூழலில் மன்னரின் உறவினர்களான மற்ர ஐரோப்பிய மன்னர்கள் அனுப்பும் படைகள் பாரிசை நோக்கி வருவதாக வதந்திகள் பரவின. அந்த சூழலில் பின்னாளைய வரலாற்று ஆசிரியர்கள் சிலாகித்து எழுதிய “பாஸ்டில் புரட்சி” நடந்தது. அது நிஜத்தில் புரட்சி எல்லாம் கிடையாது. பாஸ்டில் எனும் கோட்டையில் ஏழு கைதிகள் அன்று அடைபட்டு இருந்தார்கள். அவர்களில் நால்வர் போர்ஜரி செய்தவர்கள், கள்ளகாதலுக்கு கைது செய்யபட்ட இரு பிரபுக்கள், ஒரு கொலைகாரன்..இவர்கள் மட்டுமே அந்த ஜெயிலில் இருந்தார்கள். இவர்களை காவல் காக்க ஒரு படை. ஏழுபேரை காவல் காக்க ஒரு படையா என யோசித்து பாஸ்டில் ஜெயிலையே மூடும் எண்ணத்தில் மன்னர் இருக்கையில் ஜெயிலை உடைத்து உள்ளே புகுந்த கலவரகாரர்கள் ஜெயில் கவர்னரை பிடித்து அடித்தார்கள். சித்ரவதை தாங்க முடியாத கவர்னர் “போதும், என்னை கொன்றுவிடுங்கள்” என கதறினார். அதன்பின் அவர் கத்தியால் பலமுறை குத்தப்பட்டார். தலை வெட்டி ஈட்டிமுனையில்  சொருகபட்டு கோட்டை முகப்பில் ஏற்றப்பட்டது. மற்ற பல காவலர்களும் கொல்லபட்டார்கள். ஜெயிலில் இருந்த ஏழு பேரும் விடுதலை ஆனார்கள்.

unnamed
பிரெஞ்சு புரட்சியின் மறுபக்கம் 7

ஆக இப்படி துவங்கியது பிரெஞ்டு புரட்சி. அதன்பின் மறுநாள் தெருவெங்கும் கலவரம், துப்பாக்கிசூடு. அரசர் தன் மனைவியுடன் தப்பி ஓட முயன்று பிடிபட்டார். புரட்சிதலைவர்கள் ஐம்பது பேர் கூடி பிரெஞ்சு சுதந்திர பிரகடனத்தை வெளியிட்டார்கள். மன்னரின் அதிகாரம் கடுமையாக குறைக்கபட்டு அவர் பொம்மை மன்னராக அறிவிக்காப்ட்டார். அதிகாரம் முழுக்க புரட்சிபடை கையில் வந்தது.

புரட்சி முடிவடைந்தது. ஆனால் பஞ்சம் தீர்ந்தபாடில்லையே? மக்கள் உணவு கிடைக்கவில்லை என மறுபடி கலவரத்தில் இறங்கினார்கள். அதிகாரம் முழுக்க புரட்சிதலைவர் ரோபஸ்பியரின் கைக்கு வந்ததும் “ரெய்ன் ஆஃப் டெர்ரர்” எனப்படும் “தீவிரவாதத்தின் ஆட்சி”யை புரட்சிப்படை துவங்கியது. “டெர்ரர் தான் நீதி” என ரோபஸ்பியர் பகிரங்கமாக அறிவித்தான். அரசு கேட்கும் தானியத்தை விவசாயிகள் கொடுக்க வேண்டும் என சட்டம் போடப்பட்டது. மறுப்பவர்கள், கலவரத்தில் இறங்குபவர்கள், புரட்சிக்கு எதிரானவர்கள் என சந்தேகிக்கபட்டாவர்கள் சகட்டுமேனிக்கு கில்லடினால் தலையை வெட்டி துண்டாடபட்டனர். லூயி மன்னர், அரசி அன்டாய்னெட் எல்லாரும் கில்லடினில் தலையை வெட்டி கொல்லபட்டனர். சுமார் 40,000 பேர் கில்லடினில் கொல்லபட்டார்கள். அவர்களில் பெரும்பான்மையினோர் பொதுமக்களும்ம் விவசாயிகளுமே ஆவார்கள். உணவு பதுக்கல், படையில் சேர மறுத்தல் எல்லாம் கொலைதண்டனை குற்றமாயின.

நாத்திகரான ரூசோவின் ஆசைப்படி கிறிஸ்துவ மதம் கடுமையாக தண்டிக்கபட்டது. பாதிரியார்கள் பலர் கொல்லபட்டார்கள். கத்தோலிக்க மதத்துக்கு பதில் “பகுத்தறிவு மதம்” என புதிதாக நாத்திக மதம் புரட்சிதலைவர்களால் துவக்கபட்டது. அதுக்கு போட்டியாக  புதிய “கல்ட் ஆஃப் சுப்ரிம் பியிங்” என்ற பெயரில் புதிய மதத்தையே ரோபஸ்பியர் உருவாக்கினான். அதன்பின் பகுத்தறிவு மதத்தை பின்பற்றிய தலைவர்கள் கொல்லபட்டார்கள். ஏழுநாள் காலன்டருக்கு பதில் வாரத்துக்கு 10 நாள் காலன்டர் அறிமுகம் ஆனது. இது மக்களை கடுமையாக குழப்பியது.

இடைவிடாத படுகொலைகள், போர்கள், தீராத உணவுபஞ்சம் இவற்றால் கடும்கோபமடைந்த மக்கள் மறுபடி புரட்சியில் இறங்க ரோபஸ்பியர் பதவியில் இருந்து அகற்றபட்டான். டைரக்டரி எனும் பெயரில் ஐவர் பதை ஏற்ரார்கள். ரோபஸ்பியரையும் கில்லட்டினில் விட்டு தலையை வெட்டினார்கள். இந்த காலகட்டத்தில் பிரெஞ்சு விடுதலை சாசனம் எழுதிய ஐம்பது பேரும் கில்லடினால் கொல்லபட்டிருந்தார்கள்.

இந்த சூழலில் மீண்டும் போர்கள் மூண்டன. இதில் நெப்போலியன் எனும் ராணுவதளபதி மாபெரும் வெற்றிகள் பெற்று செல்வாக்கு பெற்றார். டைரக்டர்களை பதவியில் இருந்து அகற்றி பிரான்சு மன்னனாக முடிசூடினார். ஆக புரட்சி இப்படி லூயி மன்னனுக்கு பதில் நெப்போலியனை மன்னனாக்குவதில் வந்து முடிவடைந்தது. அதன்பின் நெப்போலியன் பிரான்சை இடைவிடாத போர்களில் ஈடுபடுத்தியது தனிக்கதை.

ஆக ரவுடித்தனம், கலவரம், படுகொலைகளின் ஒட்டுமொத்த தொகுப்பே பிரெஞ்சு புரட்சி. இதற்கு 10 வருடங்களுக்கு முன்பு நடந்த அமெரிக்க புரட்சி உலகவரலாற்றில் ஏற்படுத்திய மாற்றத்தை இது ஏற்படுத்தியதா என்றால் இல்லை என சொல்லலாம். அமெரிக்க தேசதந்தையர் “மக்களின் உரிமைகள் கடவுளிடம் இருந்து கிடைக்கபெற்றவை. மாற்ற முடியாதவை. அவ்வுரிமைகளை காக்கவே அரசுகள் உருவாகின” என கூறினார்கள். பிரெஞ்சு புரட்சிதலைவர்கள் “மக்களின் உரிமைகள் அனைத்தும் அரசிடம் இருந்து கிடைக்கபெற்றவை” என கூறினார்கள். அவர்களுக்கு கடவுள் நம்பிக்கை துளியும் இல்லை. படுகொலைகள், இடைவிடாத போர்கள், மீண்டும் மன்னராட்சி என பிரான்சின் வரலாறு 19ம் நூற்ராண்டில் திசைமாறியது.

தகவல் : PUTHU.THINNAI.COM

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech