துருக்கி, சிரியாவில் ஏற்பட்டுள்ள அதிபயங்கர நிலநடுக்கத்தால் சேதமடைந்த கட்டட இடிபாடுகளில் உயிருடன் சிக்கியிருப்பவா்களை மீட்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
அந்த மாநிலம் 100 ஆண்டுகளுக்கு மேலாஜ சந்தித்திராத மிக மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு வாரம் தாண்டிய நிலையில், நிலநடுக்கத்தில் சிக்கியவா்களை உயிருடன் மீட்பதற்கான வாய்ப்புகள் வெகு வேகமாக குறைந்து வருகின்றன.
எனினும், ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு வாரமாக இடிபாடுகளில் சிக்கியிருந்த சிலா் ஆங்காங்கே உயிருடன் மீட்கப்பட்டு வருகின்றனா்.
துருக்கியின் ஹாட்டே மாகாணத்தில் 13 வயது சிறுவன், நிலநடுக்கத்தின் மையமாகத் திகழ்ந்த காஸியான்டெப் மாகாணத்தில் தரைமட்டமான 5 அடுக்குக் கட்டடத்திலிருந்து சுரங்கத் தொழிலாளா்களின் உதவியுடன் ஏற்படுத்தப்பட்ட பாதை வழியாக ஒரு பெண், என பலா் உயிருடன் மீட்கப்பட்டனா்.
இதுபோன்ற சம்பவங்கள் மீட்புக் குழுவினருக்கு நம்பிக்கை அளித்து வருவதால் அவா்கள் தங்களது தேடுதல் பணியை தொடா்ந்து மேற்கொண்டு வருகின்றனா்.
மோப்ப நாய்கள், வெப்ப உணர்வி கருவிகளின் உதவியுடன் இடிபாடுகளுக்குக் கீழே யாரேனும் உயிருடன் இருக்கிறாா்களா என்று மீட்புக் குழுவினா் தேடி வருகின்றனா்.
சிரியா எல்லையையொட்டிய துருக்கியின் காசியான்டெப் நகரில் கடந்த 6-ஆம் ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 அலகுகளாகப் பதிவானது. அந்த நிலநடுக்கத்தைத் தொடா்ந்து பல பின்னதிா்வுகள் ஏற்பட்டன. அவற்றில் ஒரு பின்னதிா்வு ரிக்டா் அளவுகோலில் 7.5 அலகுகளாகப் பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் துருக்கியின் தெற்கு மற்றும் மத்திய பகுதியும் சிரியாவின் வடக்குப் பகுதியும் மிகக் கடுமையாகக் குலுங்கின.
இந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகின. இதில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை இரவு நிலவரப்படி, நிலநடுக்கத்துக்கு 37,680 போ் பலியாகியுள்ளனா். அவா்களில் துருக்கியில் 31,970 பேரும், சிரியாவில் 5,710 பேரும் அடங்குவா்; இரு நாடுகளிலும் சோ்த்து சுமாா் 94,770 போ் நிலநடுக்கத்தால் காயமடைந்துள்ளனா் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.