இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க அரசியல்வாதியான நிக்கி ஹேலி டொனால்ட் டிரம்பிற்கு போட்டியாக 2024ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான தேர்தலில் களமிறங்கப் போவதாக அறிவித்துள்ளார்.
2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிடுவேன் என முன்னாள் மாகாண கவர்னரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான நிக்கி ஹாலே, 51, இன்று அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் 2024-ல் நடக்கவுள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடப் போவதாக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 76, ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அமெரிக்காவில் பிரதான கட்சிகளான ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சிகள் சார்பில், அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெறவேண்டும்.
இந்நிலையில் இதே கட்சியைச் சேர்ந்த மூத்த நிர்வாகியான நிக்கி ஹாலே வீடியோ வாயிலாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 2024 அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளருக்கான போட்டியில் நானும் களமிறங்குவேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். டிரம்ப்பிற்கு போட்டியாக களம் இறங்க போவதாக அதே கட்சியைச் சேர்ந்த நிக்கி ஹாலேயும் அறிவித்துள்ளது அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நிக்கி ஹேலி அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாண ஆளுநராக இரண்டு முறை செயல்பட்டுள்ளார். மேலும் டொனால்ட் ட்ரம்ப் அதிபராக இருந்தபோது 2017 ஜனவரி முதல் 2018 டிசம்பர் வரை ஐநா சபைக்கான அமெரிக்க தூதராகப் பணியாற்றியுள்ளார். இவர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார்.