Thursday, January 15, 2026

போர் நிறுத்த ஒப்பந்ததை மீறி பாகிஸ்தான் மீண்டும் அடாவடி? 

by Editorial Team
0 comments

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, இந்திய எல்லை பகுதிகளில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, கடந்த நான்கு நாட்களாக இந்தியா-பாகிஸ்தான் இடையே கடும் சண்டை நடந்து வரும் நிலையில் அமெரிக்காவின் சமரச பேச்சு வார்த்தைக்கு பின் இரு நாடுகளும் தாக்குதல்களை தற்காலிக நிறுத்த ஒப்புக்கொண்டன. நேற்றிரவு இந்த புரிந்துணர்வை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.    

ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor)

கடந்த 22 ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது. இதில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்னும் நடவடிக்கையை கையில் எடுத்தது. இதன்படி கடந்த 6ஆம் தேதி நள்ளிரவில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியதில் தீவிரவாத அமைப்புகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் உட்பட 100 பேர் கொல்லப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் போன்ற இந்தியாவின் மேற்கு எல்லை பகுதிகளை குறிவைத்து சிறிய பீரங்கிகள், ட்ரோன், ஏவுகணைகள் முதலியவற்றைக் கொண்டு பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. 

இந்த தாக்குதல்களை வெற்றிகரமாக எதிர்கொண்ட இந்திய ராணுவம், அனைத்தையும் இடைமறித்து அழித்தது. இதனால் பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. 

பாகிஸ்தானின் இந்த தாக்குதலுக்கு தக்க பாடம் புகட்டும் வகையில் அந்நாட்டின் முக்கிய நகரங்களை குறிவைத்து இந்தியா பதில் தாக்குதல் நடத்தியது. இதில் அந்நாட்டு முக்கிய ராணுவ தளங்கள் பலத்த சேதமடைந்தன.

மீண்டும் தாக்குதல் 

3 வது நாளாக  இந்திய எல்லையோர நகரங்களான ஸ்ரீநகர், பாரமுல்லா, உரி, அமிர்தசரஸ், ஜெய்சால்மர், நூர்பூர் போன்ற  26 நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடர்ந்தது. பாகிஸ்தானின் இந்த தாக்குதல்களை இந்தியா தன்னுடைய S- 400 போன்ற வான் பாதுகாப்பு அமைப்புகளைக் கொண்டு முறியடித்தது.

நான்காவது நாளாக இந்திய நகரங்கள் மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்திற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா மீண்டும் அதிரடியாக தாக்கியதில், பாகிஸ்தானின் 8 ராணுவ தளங்கள் பலத்த சேதம் அடைந்தன. 

கடந்த நான்கு நாட்களாக நடந்து வரும் தாக்குதல்களுக்கு நடுவில் பாகிஸ்தான்  ராணுவ உயர் அதிகாரிகள், இந்திய ராணுவ உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முன் வந்தனர். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க்கோ ரூபியோ இரு நாடுகளுக்கிடையே சமரச பேச்சுவார்தையை முன்னெடுத்தார். இதில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டன. 

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ‘இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்து வரும் தாக்குதல்களை நிறுத்தக் கோரி அமெரிக்கா இரு நாடுகளுக்கு இடையே சமரசத்தில் ஈடுபட்டது. நீண்ட நேரம் தொடர்ந்த பேச்சுவார்த்தைக்கு பின் போர் தாக்குதல்களை நிறுத்த இருநாடுகளும் ஒப்புக்கொண்டன. இரு நாட்டு தலைவர்களும் நல்ல முடிவை எடுத்துள்ளனர். அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார். 

டிரம்பின் வலைதள பதிவு வெளியான சற்று நேரத்தில் பாகிஸ்தான் தாக்குதலை நிறுத்துவதாக அறிவித்தது. இதனை, பாகிஸ்தான் நாட்டுத் துணை பிரதமரும்  மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் டார் (Ishaq Dar) தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தெரிவித்தார். 

இதனைத் தொடர்ந்து நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது, ‘இன்று மாலை 3.35 மணியளவில் பாகிஸ்தான் பாதுகாப்பு துறை இயக்குநர், இந்திய பாதுகாப்பு துறை இயக்குனருடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது, இரு தரப்பினருக்கிடையே நடந்துவரும் வான், கடல், தரை வழியாக அனைத்து தாக்குதல்களையும் நிறுத்துவதாக முடிவெடுக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் இன்று மாலை 5 மணி முதல் அமலுக்கு வருகிறது’ இவ்வாறு அவர் கூறினார். 

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் தனது வலைதள பதிவில், ‘ராணுவ தாக்குதல்கள் நிறுத்துவது குறித்து இரு நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளன. பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும் வெளிப்பாடுகளுக்கும் எதிராக இந்தியா தொடர்ந்து சமரசமற்ற, உறுதியான நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருகிறது. இனி வரும் நாட்களிலும் இந்த நிலைப்பாட்டில் இந்தியா தொடர்ந்து பயணிக்கும்’ என்று கூறியுள்ளார்.  

இருநாட்டு அறிவிப்புகளை தொடர்ந்து நான்கு நாட்களாக நடந்து வந்த ராணுவ தாக்குதல்கள் முடிவுக்கு வந்ததாக கருதப்பட்டது.

மீறல் 

போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த மூன்று மணி நேரத்தில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. நேற்று இரவு இந்தியாவின் பல இடங்களில் குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. காஷ்மீரின் ஸ்ரீநகர், ஆக்நூர், பீர்பாஞ்சல் ஆகிய பகுதிகளில் சுமார் ஒன்பது மணிக்கு மேல் பாகிஸ்தான் ட்ரோன் மற்றும் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்திய ராணுவம் அதிரடியாக செயல்பட்டு, பாகிஸ்தானின் அனைத்து ட்ரோன்களையும், ஏவுகணைகளையும் நடுவானிலேயே இடைமறித்து அழித்தது. 

மேலும், பாதுகாப்பு கருதி எல்லையோர மாநிலங்களின் சில பகுதிகளுக்கு மின் இணைப்பு தடை செய்யப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் முதலமைச்சர் உமர் அப்துல்லா, டிரோன் தாக்கும் காணொளியை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, ‘காஷ்மீரில் மீண்டும் ட்ரோன் தாக்குதல்கள் நடைபெறுகின்றன, போர் நிறுத்த ஒப்பந்தம் என்ன ஆனது?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

இவற்றை தொடர்ந்து வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி நேற்றிரவு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பாகிஸ்தான் போர் நிறுத்த அறிவிப்பை மீறியுள்ளது. அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்ட  ட்ரோன்களை இந்திய விமானப்படை திறம்பட செயல்பட்டு இடைமறித்து அழித்துள்ளது. மேலும் இது போன்ற அத்துமீறல்கள் ஏற்பட்டால் உடனடியாகத் திருப்பி தாக்கும் வகையில் இந்திய ராணுவத்திற்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து பாகிஸ்தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்’ என்று கூறினார். எனினும், பாகிஸ்தான் இதனை மறுத்துள்ளது.

மெல்ல திரும்பும் இயல்புநிலை 

நள்ளிரவுக்கு மேல், ட்ரோன்கள், ஏவுகணைகள் தாக்குதல்கள் எதுவும்  நடக்கவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது ஞாயிற்றுக்கிழமை காலை முதல் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் முதலிய எல்லையோரப் பகுதிகளில் மெல்ல மெல்ல இயல்பு நிலை  திரும்பி வருகிறது. 

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா, பூஞ்ச், உரி உள்ளிட்ட பகுதிகள் அமைதியாக காணப்பட்டன. அதே போல் பஞ்சாப்பின் பிரோஸ்பூர், பதன்கோட் பகுதிகளிலும் இயல்புநிலை திரும்பிய நிலையில், ராஜஸ்தான் மாநிலத்திலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. 

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech