“ஆபரேஷன் சிந்தூரின்(Operation Sindhoor) மூலம் நாங்கள் குறி வைத்தது பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளை தானே தவிர, அவர்களின் ராணுவத்தை அல்ல” என்று இந்தியா கூறியுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே அண்மையில் நடந்து ஓய்ந்த போர் பதற்ற நிலைக்கு பின், முப்படைகளின் ராணுவ உயரதிகாரிகள் (DGMO) செய்தியாளர்களை சந்தித்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய ஏர் மார்ஷல் ஏ. கே பார்தி, ‘பாகிஸ்தான் ராணுவம் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக சண்டையிட்டது பரிதாபத்திற்குரியது. எனவே, நாங்கள் பதிலடி கொடுக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டோம். இந்தியாவின் வலுவான வான் பாதுகாப்பு அமைப்பு, நமது ராணுவ தளங்களை குறிவைக்கும் பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சிகளை திறம்பட முறியடித்தது’ கூறினார்.
இது குறித்து மேலும் பேசிய ராணுவ அதிகாரிகள் ‘உள்நாட்டு தயாரிப்பான ஆகாஷ் போன்ற வான் பாதுகாப்பு அமைப்புகளின் அபாரமான செயல்திறன் இந்திய ராணுவத்தின் மற்றொரு சிறப்பம்சமாக இருந்தது.
இந்தியாவில் உள்ள அனைத்து ராணுவ தளங்களும் பாதுகாப்பு அமைப்புகளும் முழுவீச்சில் தயார் நிலையில் இருப்பதோடு அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தயாராக உள்ளன.
மேலும், ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு (Integrated Air Command and Control system) பாகிஸ்தானின் ராணுவ தாக்குதல்களை சிதறடித்து விட்டது. அதோடு ஆபரேஷன் சிந்தூரில் பணியாற்றிய அனைத்து விமானிகளும் வெற்றிகரமாக நாடு திரும்பினர்’ என்றும் தெரிவித்தனர்.
ஆபரேஷன் சிந்தூர்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த மே 7ஆம் தேதி, ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ என்னும் பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள 9 பயங்கரவாத அமைப்புகளின் முகாம்களை இந்திய விமானப்படை தாக்கி அழித்தது. இதையடுத்து பாகிஸ்தானின் தாக்குதல்களையும் ஆபரேஷன் சிந்தூரின் பெயரிலேயே இந்தியா பதிலடி கொடுத்தது. இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்த நிலையில் இரு நாடுகளும் மாறி மாறி ராணுவ தளங்களை குறிவைத்து தாக்கினர்.
நேற்று முன்தினம் இரு தரப்பினருக்கும் சமரசம் எட்டிய நிலையில், வான்,கடல், தரைவழி தாக்குதல்களை நிறுத்திக்கொள்ள முடிவெடுக்கப்பட்டது.
முன்னதாக இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகளுக்கு இடையேயான தொலைபேசி உரையாடல் இன்று மதியம் 12 மணிக்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், சில மணி நேரம் தாமதமாக மாலையில் நடைபெற்றது. தாமதத்திற்கான காரணம் தெரியவில்லை.