குழந்தையுடன் சென்றுக்கொண்டிருந்த காவலர் மீது ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
மித்ரி மோரி (Mitry-Mory) அருகே தன்னுடைய இரண்டு வயது குழந்தையுடன் காரில் சென்றுக்கொண்டிருந்த காவலர் ஒருவரை ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்று வழிமறித்து அவரின் குழந்தையின் கண்முன்னே கடுமையாக தாக்கியுள்ளது.
நேற்று முன்தினம் மாலை ஆறு மணியளவில் நடைபெற்ற இச்சம்பவத்தில் 45 வயதான அந்த காவலர் படுகாயமடைந்துள்ளார்.
சீருடை அணியாமல் தனிப்பட்ட பயணத்திலிருந்த அவர், அந்த கும்பலை அமைதியாக்கும் பொருட்டு தானொரு காவலர் என்று கூறியுள்ளார். இதில் கோபமடைந்த அக்கும்பல், அவரை மேலும் சராமாரியாக தாக்கியுள்ளது.
மேலும், அவருடைய செல்போன் மற்றும் பர்ஸ் ஆகியவற்றையும் அக்கும்பல் பறித்து சென்றுள்ளது.
வாகன நிறுத்தத்தில் ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றி கைகலப்பில் முடிந்ததாக அரசு வழக்குரைஞர் (Seine-et-Marne) தெரிவித்துள்ளார்.
‘இதுவொரு கோழைத்தனமான தாக்குதல்’ என மித்ரி மோரியின் நகரத்தலைவர் சரோலெத் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.