மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து அச்சத்தை ஏற்படுத்தியவர்களை கைது செய்தே தீருவோம் எனறு பிரான்ஸ் சட்ட அமைச்சர் சூளுரைத்துள்ளார்.
பிரான்சின் விமான நிலையங்கள் மற்றும் சுற்றுலா இடங்களுக்கு கடந்த புதன்கிழமை மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பியதால் பெரும் பரபரப்பு உண்டானது.
லீல், லியோன், நாந்த், நீஸ், தூலூஸ், புவே விமான நிலையங்களில் பயணிகளை வெளியேற்றி கடும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் பல விமானங்கள் தாமதமான நிலையில், தரையிறங்கவிருந்த மூன்று விமானங்கள் வேறு நாடுகளுக்கும், வேறு விமான நிலையங்களுக்கும் திருப்பி விடப்பட்டன.
அனைத்து விமான நிலையங்களிலும் நிலைமை மாலை சீரானது.
இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்களை கண்டுபிடித்து கைது செய்தே தீருவோம் என பிரான்சின் சட்ட அமைச்சர் எரிக் துபோன் மொரெட்டி (Éric Dupond-Moretti) சூளுரைத்துள்ளார்.
‘அவர்களை கண்டுப்பிடித்து தண்டிப்பதோடு, ஒருவேளை அவர்கள் சிறார்களாக இருப்பின், ஏற்பட்ட இழப்புகளுக்கு அவர்கள் பெற்றோர்களின் மூலம் இழப்பீடு பெற வலியுறுத்தப்படும்’ என்றார்.
பாரிசுக்கு அருகிலுள்ள புகழ்பெற்ற ‘வெர்சாய் அரண்மனை’ (Palace of Versailles) கடந்த சனிக்கிழமையிலிருந்து மூன்றாவது முறையாக வெடிகுண்டு புரளியால் பாதிக்கப்பட்டது.
பார்வையாளர்கள் வெளியேற்றப்பட்டு வெடிகுண்டு நிபுணர்களால் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
கடந்த அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாத இயக்கத்தினர் நடத்திய தாக்குதலையடுத்து பிரான்சின் அராஸ் நகரத்தில் ஆசிரியர் ஒருவர் தீவிரவாத தொடர்புடைய நபரால் கத்திக்குத்து தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இதனையடுத்து பிரான்சில் உள்நாட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
மேலும், கொல்லப்பட்ட ஆசிரியரின் பள்ளிக்கு கடந்த திங்கட்கிழமை அன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த சனிக்கிழமை அன்று புகழ்பெற்ற லூவ்ர் (Louvre Museum) அருங்காட்சியகமும் வெடிகுண்டு மிரட்டலால் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.