பிரான்சிலுள்ள பல விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏழு விமான நிலையங்கள் மூடப்பட்டன.
பல விமான நிலையங்களில் பயணிகள் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் விமானங்கள் தரையிறங்குவதற்கும் புறப்படுவதற்கும் தொடர்ந்து தாமதங்கள் ஏற்பட்டன.
தொடர் பாதுகாப்பு காரணமாக நேற்று (புதன்கிழமை) பிரான்சிலுள்ள ஏழு விமான நிலையங்கள் மூடப்பட்டன.
Lille (லீல்), Nantes (நாந்த்), Nice (நீஸ்), Toulouse (தூலுஸ்), Beauvais (பொவே), மற்றும் Lyon’s Bron (லியோன்) விமான நிலையங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக காவல்துறையினர் தெரிவித்தார்கள்.
‘மிரட்டல் மின்னஞ்சல்’ வரப்பெற்றதைத் தொடர்ந்து பயணிகள் வெளியேற்றப்பட்டதாக ஸ்ட்ராஸ்பர்க் விமான நிலையத்தின் செய்தித்தொடர்பாளர் கூறினார்.
இதற்கிடையில், வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து பயணிகள் விமான நிலைய முனையத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக பிரான்ஸ் சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். .
விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டாலும் Toulouse-Blagnac, Lille-Lesquin and Beauvais-Tillé விமானங்களின் வருகை மற்றும் புறப்படும் நேரம் 2 மணி நேரம் தாமதங்களை சந்தித்தது.
விமானங்கள் வேறு இடங்களுக்கு திருப்பி விடப்பட்டன.
பாதுகாப்பு காரணங்களுக்காக நேற்று காலை தூலூஸ், லீல் மற்றும் பொவே விமான நிலையங்களில் தரையிறங்கவிருந்த மூன்று விமானங்களை விமான கண்காணிப்பகம், ப்ரசெல்ஸ், ஒஸ்தெந்த் மற்றும் பாரீஸ் சார்ள் தெ கால் விமான நிலையங்களுக்கு திருப்பி விட்டதாக செய்தித்தளம் தெரிவிக்கிறது.
பிரான்சின் அராஸ் நகரில் ஆசிரியர் ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து புகழ்பெற்ற இடங்களான லூவ்ர் அருங்காட்சியம் (Louvre Museum) மற்றும் வெர்சாய் அரண்மனை (Versailles Palace) போன்றவற்றிலிருந்து பார்வையாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இந்த வரிசையில் தற்போது விமான நிலையங்களும் இடம்பெற்றுள்ளன.
தீவிர விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது.
பிரான்ஸ் உள்நாட்டு பாதுகாப்பை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.