பிரான்சின் முன்னணி நிறுவனமான ஏர் பிரான்ஸ் தனது பெரும்பாலான விமானங்களை ஒர்லியிருந்து சார்ள் தி கோல் (CDG) விமான நிலையத்திற்கு மாற்ற திட்டமிட்டுள்ளது.
ஏர் பிரான்ஸ் நிறுவனத்தின் குறைந்த கட்டண விமான சேவையான Transavia (டிரான்சாவியா) எனும் துணை நிறுவனத்தின் விமானங்களை மட்டும் ஒர்லி (Orly) விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கும் எனத் தெரிகிறது.
கார்ப்பரேட் நிறுவனங்களில் உயரும் கணினி வழி காணொளிக் கலந்துரையாடல்களால் (Video Conferencing) வணிக நோக்கிலான உள்நாட்டு விமான போக்குவரத்து பயணம் குறைந்துள்ளதால் ஏர் பிரான்ஸ் நிறுவனத்தின் உள்நாட்டு போக்குவரத்து குறைந்துவிட்டதாக அந்நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
2019-23 ஆண்டுகளுக்கு இடையேயான ஆண்டுகளில் ஒர்லி விமான போக்குவரத்து 40% வீழ்ச்சியடைந்துள்ளது.
இத்திட்டங்களின் ஒரு பகுதியாக, ஏர் பிரான்ஸ் பாரிஸ் மற்றும் துலூஸ், மர்சை மற்றும் நீஸ் ஆகியவற்றுக்கு இடையிலான தற்போதைய விமான பயண எண்ணிக்கையை 90% ஆகக் குறைக்கும் என்று கூறியுள்ளது,
ஆனால், பாரிஸ் மற்றும் பிரான்சின் கடல்கடந்த மாநிலங்களில் வழித்தடங்கள் வழக்கம் போலவே இயங்கும் என்றும் கூறியுள்ளது.
கோவிட் பெருந்தொற்றின் போது பெரும்பாலான தொழில்களின் பணி முறைகள் மாற்றியமைக்கப்பட்டதால் பாதிப்படைந்த விமானப் போக்குவரத்துத் துறையில் வணிக நோக்கிலான பயணத் தேவை மீண்டும் மெதுவாக பழைய நிலைக்கு திரும்புவதாக விமான நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.
ஏர்பிரான்ஸ் நிறுவனம், கிட்டத்தட்ட தனது அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களையும் 2026-ஆம் ஆண்டுக்குள் பாரிஸ் சார்ள் டி கோல் விமான நிலையத்திற்கு மாற்றத் திட்டமிட்டுள்ளது.
2026-ஆம் ஆண்டுக்குள் ஏர்பிரான்ஸ் விமான நிறுவனத்திற்கு போதுமான ஊழியர்கள் தேவைப்படும் என்பதால், ஒர்லி ஊழியர்கள் சார்ல் தெ கால் விமான நிலையத்தில் அதே பணி நிலையில் வேலைக்கு அமர்த்த விரைவில் ஊழியர் பிரதிநிதித்துவக் சங்கங்களுடன் ஆலோசனையும், தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தையையும் தொடங்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.