தொடரும் வெடிகுண்டு மிரட்டல்களைத் தொடர்ந்து விமான நிலையங்களிலும் ரயில்களிலும் பிரான்ஸ் தனது உள்நாட்டு பாதுகாப்பினை அதிகரித்துள்ளது.
விமான நிலையங்களின் பாதுகாப்பு 40% உயர்த்தப்பட உள்ளதாகவும், SNCF ரயில் சேவையில் கூடுதலாக 20% காவலர்கள் பணியில் ஈடுபடுத்தவிருப்பதாகவும் போக்குவரத்து அமைச்சர் கிளெமன்ட் தெரிவித்துள்ளார்.
‘போக்குவரத்து வலைப்பின்னல்களில் மீது நடத்தப்படும் தாக்குதல்களில் தான் நிறைய உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்பதை ஐரோப்பாவும், பிரான்சும் ஏற்கனவே சந்தித்துள்ளன’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி அராஸ் நகரத்தில் பள்ளியொன்றில் ஆசிரியர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டதை தொடர்ந்து பிரான்ஸ் முழுதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
கடந்த புதன்கிழமை முதல் இதுவரை விமான நிலையங்களுக்கு 70 வெடிகுண்டு மிரட்டல்கள் மின்னஞ்சல் வாயிலாக விடுக்கப்பட்டுள்ளன.
அவற்றில் பெரும்பான்மை மின்னஞ்சல்கள் சுவிஸை சேர்ந்த மின்னஞ்சலிலிருந்து வந்ததாக கூறப்படுகிறது.
போலி வெடிகுண்டு மிரட்டல்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், குறைந்தது 30 ஆயிரம் முதல் 45 ஆயிரம் யூரோக்கள் வரை அபராதமும் விதிக்கப்படும் விதிக்கப்படும்.
‘வெடிகுண்டு மிரட்டல்கள் விளையாட்டான விஷயம் அல்ல. அது கடுமையான குற்றம்!’ என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
ஞாயிறு நண்பகல் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக வெர்சாய் அரண்மனை ஏழாவது முறையாக காலியாக்கப்பட்டு பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது.